தமிழக அரசியலில் ஆளும் கட்சியான திமுகவை நேர்மையாக எதிர்ப்பதில் அதிமுக மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சுணக்கம் காட்டிவரும் சூழலில் நேர்மையாக எதிர்த்து வருகிறது பாஜக என்று பல்வேறு ஊடகவியலாளர்களே கூறிவருகின்றனர்.
அந்த வகையில் தொடர்ச்சியாக ஆளும் அமைச்சர்கள் சிலரின் ஊழல் பட்டியலை வெளியிட்டு ஆளும் கட்சியை அதிர செய்த அண்ணாமலை, தற்போது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவிடத்தை முன்வைத்து தீவிர அரசியலில் ஈடுபட இருக்கிறார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “காமராஜரின் நினைவிடத்தை சீரமைக்க ரூ.1 கோடி வழங்க தயார் என தெரிவித்தது தென் மாவட்டங்களில் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, “ஒப்பற்ற தலைவர் காமராஜரின் நினைவிடம் உட்பட, காந்தியை பின்பற்றிய தலைவர்களின் நினைவிடங்கள் கிண்டியில் கவனிப்பாரற்று கிடக்கின்றன.
காமராஜர் நினைவிடத்தை, மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தை(எம். ஜி. ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ) போல சீர்படுத்தி, மக்களை கவரும் வண்ணம் அமைக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டு கொள்கிறேன். இதற்காக, தமிழக பாஜக சார்பில், 1 கோடி ரூபாய் நிதி திரட்டி முதல்வரிடம் வழங்க தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டார்.
நினைவிடத்தை சீரமைக்க இயலாவிட்டால், அதை சீரமைக்கவும், பராமரிக்கவும் பாஜகவுக்கு அரசு அனுமதி தந்தால், மேலும் கூடுதல் நிதி திரட்டி, முக்கியமான சுற்றுலா தலமாக மாற்றுவோம் என, உறுதியாக தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
ஏற்கனவே இரண்டு திராவிட கட்சிகளும் தமிழகத்திற்காக உழைத்த காமராஜரை கண்டுகொள்ளவில்லை தங்கள் கட்சி தலைவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் 5% கூட காமராஜருக்கு கொடுக்கவில்லை என காமராஜர் ஆதரவாளர்கள் இடையே ஆதங்கம் இருக்கிறது, விரைவில் கருணாநிதி நினைவு மண்டபம் விவகாரம் முக்கியத்துவம் பெற உள்ள நிலையில், பாஜக காமராஜருக்கும் பிரமாண்ட நினைவிடம் அமைக்க கோரி மாநிலம் முழுவதும் பேரணி ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றை துவக்க உள்ளதாம்.
அதிமுக இப்போது ஒரு சாதி சமூகத்திற்கான கட்சியாக முத்திரை விழுந்த சூழலில் திமுகவை வீழ்த்த பாஜக அனைத்து சமுதாயதிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பணியை தொடங்கி இருப்பது அதன் முதற் படியாக காமராஜர் நினைவிட அரசியலை கையில் எடுத்து ஆளும் கட்சிக்கு அடுத்த தலைவலியை உண்டாக்கி இருக்கிறது.