ஆளும் திமுகவின் அறிவிப்பிற்கு வழக்கமாக அதன் கூட்டணி கட்சிகள் முட்டு கொடுப்பது வழக்கம், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கு எதிர்க்கட்சியாக இருந்த திமுக எதிர்ப்பு தெரிவித்தது அதில் முக்கியமானது சொத்து வரி உயர்வு இதனை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார் ஆனால் தற்போது அவரே 150% வரை சொத்து வரியை உயர்தியுள்ளார்.
இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றனர், பாஜக வருகின்ற 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது, இந்த சூழலில்தான் திராவிட கழகத்தலைவர் வீரமணி ஆளும் திமுகவின் சொத்து வரி உயர்விற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மேலும் அண்ணாமலை குறித்தும் விமர்சனம் செய்துள்ளார்,வரிகளே முன்னேற்றத்திற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களாக தி.மு.க. ஆட்சி, அதன் சீரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது.
இக்கட்டான பொருளாதார நெருக்கடி உண்டாகும் வண்ணம் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், மக்கள் வரிப் பணத்தை எப்படி பயனுறு வகையில் செலவழிப்பது, அதற்கேற்ப எப்படி திட்டமிட்டு வருவாயைப் பெருக்குவது என்பது பற்றியெல்லாம் கவலைப்படாது கடனுக்கு மேல் கடன் வாங்கியது (வட்டிக் கட்டக் கூட புதுக்கடன் வாங்கிக் கட்டும் தவறான நிதி மேலாண்மையை நடத்திய நிலையில்). புதிய தி.மு.க. அரசு அனுபவம்மிக்க பொருளாதார மேதைகளையும்,
நிதி நிர்வாக அறிஞர்களையும் கொண்ட நிதி ஆலோசனைக் குழுவை - உலக அளவில் புகழடைந்தவர்களைக் கொண்டு அமைத்து அவர்களது ஆலோசனைப்படியே, கடும் நிதிப் பற்றாக்குறை, நெருக்கடியை சமாளித்திட ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையிலும், நடுத்தர மக்கள் ஓரளவு தாங்கும் வண்ணமும் புதிய வருவாய் பெருக்கலை, நிதி ஆலோசகர்கள் கருத்துப்படி ஆராய்ந்தே முடிவெடுத்துள்ளனர்.அண்மையில் நகர்ப்புற சொத்து வரிகளை உயர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு.வரி போடாமல் ஆட்சி நடத்த முடியுமா?
எந்த அரசும் வரி போடாமல் ஆட்சி செய்ய முடியாது என்பதும், அப்படி போடப்படும் வரி தாங்கக் கூடியவர்களுக்குப் போடப்பட வேண்டும் என்பதும், வசதியானவர்களிடம் வசூலிக்கவேண்டும் என்பதும்தான் ஒப்புக்கொள்ளப்பட்ட பொருளாதார விதி.சென்ற 10 ஆண்டுகாலத்தில் சொத்து வரிகளை உயர்த்திடத் தயங்கியதால்தான் - ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஆய்வு செய்து, அதற்கேற்ப சொத்து வரிகளை உயர்த்தவேண்டும் என்பதைக்கூட வேண்டுமென்றே சரியாக அமல்படுத்தாததினால்தான், 15 ஆவது நிதிக் கமிஷன் மாநில அரசுகளுக்குக் கொடுத்த வழிகாட்டும் ஆணைப்படி - நகர்ப்புற வசதிகள் தமிழ்நாட்டில் 58 விழுக்காடு என்பது அதிகமான அளவில் உள்ளதால்தான் நகர்ப்புற சொத்துவரியை உயர்த்துவது தேவை - இன்றியமையாதது என்று அத்துணை ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவு எடுத்து அறிவித்த பிறகே இந்த வரி உயர்வுகள் போடப்பட்டுள்ளன.
நிதி நிபுணர்களின் கருத்தென்ன?மேனாள் ஒன்றிய நிதித் துறை செயலாளரும், இன்று தமிழ்நாடு முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான திரு.நாராயணன் அய்.ஏ.எஸ்., ஆங்கில நாளேடு ஒன்றில் கொடுத்த பேட்டியில் இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்!
15 ஆவது நிதிக்குழு, ‘’தமிழ்நாட்டிற்கு நிதி உதவி தரவேண்டுமானால், 10 ஆண்டுகளுக்குமேல் உயர்த்தப்படாத நகர்ப்புற சொத்துவரியை உயர்த்தி ஆகவேண்டும். இல்லையானால், உள்ளாட்சிகளுக்கு எவ்வித மானிய உதவியும் கிடைக்காது’’ என்று திட்டவட்டமாகவே கூறியுள்ளது!
வளர்ச்சிக்கான நிதியைப் பெற இந்த நிபந்தனையை செயல்படுத்தவேண்டிய கட்டாயம் இந்தத் தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டுள்ளதால், இந்த வரி உயர்வு!இதை நகர்ப்புற வளர்ச்சிக்கான மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் செய்தியாளர்களுக்கு விளக்கியுள்ளார்.இப்போது கஜானாவை காலி செய்த ‘கனதனவான்கள்’ இதை எதிர்த்துப் போராட்டம் என்ற நாடகம் ஆடுகிறார்கள்!
இதில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் சொத்து வரி உயர்த்தியுள்ளதற்கு எதிர்ப்பு என்ற போராட்ட வேடம் கட்டி ஆடுகிறார்.பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதா?வரி போட அவர்களே முன் நிபந்தனை - உள்ளாட்சி நிதி மானியம் உதவி தர ஆணையிட்டுவிட்டு, அதை மாநில அரசு செயல்படுத்தும்போது, இங்கே ‘போர் - ஆட்டம்‘ என்பது ஏமாற்று வித்தையல்லாமல் வேறு என்ன?
‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!2021-2022 முதல் 2025-2026 நிதி ஆண்டுவரை உள்ளாட்சிகளுக்கான மானிய உதவித் தொகை 13,943 கோடி ரூபாயைத் தர இந்த நிபந்தனையை 15 ஆவது நிதிக் கமிஷன் இணைத்திருக்கிறது என்பதை முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் நாராயணன் விளக்கியுள்ளதோடு,15 ஆவது நிதிக் கமிஷனின் உறுப்பினர் அனூப்சிங் என்பவருக்கும் இதனை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்!
இது புரியாமல் இங்குள்ள அரசியல்வாதிகள் - சில கட்சித் தலைவர்கள் ஏதோ தி.மு.க. இப்படி ஒரு காரணத்தைக் கூறுகிறது என்பதுபோல பொறுப்பின்றிப் பேசுவது அவர்களது அறிவு சூன்யத்தையே காட்டும் என குறிப்பிட்டுள்ளார் வீரமணி.சரிங்க வீரமணி போன ஆட்சியில் வரி உயர்த்த வேண்டும் என அதிமுக தெரிவித்த போது ஏன் ஸ்டாலின் அதனை எதிர்த்து அறிக்கை கொடுத்தார் என ஒரு கேள்வி கேளுங்களேன் ஆளும் கட்சிக்கு முட்டு கொடுக்கலாம் ஆனால் இந்த அளவிற்கு கூடாது என்கின்றனர் பாஜக இன்னும் பிற கட்சியினர்.