24 special

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து பெண் மருத்துவர் பகிர்ந்த தகவல் வைரல், யார் காரணம்?

Kallakuruchi protest
Kallakuruchi protest

பெண் மருத்துவர் ரேவதி மணிபாலன் என்பவர் எழுதிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது அது பின்வருமாறு :- நேற்றிரவு பணியிலிருந்தபோது ஒரு லாட்ஜ் ஓனரும் அவரது நண்பரும் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் வந்திருந்தனர். யாரோ மர்ம நபர்கள் எட்டுபேர் தங்களைத் தாக்கி பணம் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகவும் தெரிவித்தனர். போலீசார் அனைவரும் கள்ளக்குறிச்சி கலவரத்தின் பொருட்டு மாற்றுப்பணிக்குத் திருப்பி விடப்பட்டிருப்பதாகவும் ஒருவர் மட்டும் பணியில் இருப்பதாகவும் அங்கிருந்தே தாங்கள் சிகிச்சைக்காக வந்ததாகவும் என்னிடம் தெரிவித்தனர்.


அவர்களுக்கான முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக பரிந்துரை கடிதத்துடன் அனுப்பி வைத்துவிட்டு பணியினைத் தொடர்ந்தேன்.பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலைப் பிரச்சினை இத்தனை பெரிய விஸ்வரூபம் எடுத்திருப்பது வருந்தத் தக்கதாக உள்ளது. பிள்ளையை இழந்து தவிக்கும் அந்தத் தாய்க்கு உங்களைப் போலவே என்னிடமும் ஆறுதல் வார்த்தைகளே இல்லை. அந்தத் தாய்க்கு நீதி வேண்டுமென்பதிலும் மாற்றுக் கருத்தே இல்லை.

முதலில் நானும் ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனின் தாய் ;இதே மாதிரியே மகனை ஒரு ரெசிடென்ஷியல் பள்ளியில் சேர்த்து விட்டு தவிப்போடு அமர்ந்திருக்கும் தாய் ஆனால் இதையெல்லாம் தாண்டி சில விஷயங்களை அலச வேண்டியிருக்கிறது. பிள்ளையின் மரணம் அசம்பாவிதம். அது கொலையா தற்கொலையா என ஆராய வேண்டியது அரசின் கடமை. பிரச்சினை விஸ்வரூபம் எடுக்குமுன் முன்னதாகவே ஒருவேளை அரசு தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு முனைந்திருந்தால் இத்தனை கலவரங்கள் தவிர்க்கப் பட்டிருக்கலாம். அந்தத் தாயின் தவிப்பு தன் பிள்ளையின் சாவுக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயத்தில் வெடித்தது.

அந்தத் தவிப்பைப் பகிர்ந்ததில் சோஷியல் மீடியாக்கள் தன் பங்களிப்பை அபரிமிதமாக அபகரித்துக் கொண்டன. கலவரக்காரர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்து அரசை மீறி சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டது என்ன இருந்தாலும் தவறு என்று மட்டும்தான் தோன்றுகிறது எனக்கு. யூட்யூபில் பார்க்கிறேன். ஆளாளுக்கும் தன் டிடெக்டிவ் மூளையைக் கசக்கிப் பிழிந்து ஆளுக்கொரு கருத்து தந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களெல்லாம் இன்னும் இரண்டே நாளில் சமந்தாவோ வேறொரு நடிகையோ திருமணம் செய்தால் அதைப்பேசப் போய்விடுவார்கள். கோயம்புத்தூர் சிறுமியின் மரணக்கதை எத்தனை நாள் பேசப்பட்டது ?

அது முடிந்து எத்தனை மாதங்களில் இது நிகழ்ந்திருக்கிறது ? அதில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் வக்கிரம் என்பதும் ஒருபக்கம் உண்மை. அந்தச் சிறுபெண்ணுக்கும் சற்றே வயதிற்கும் மீறிய முதிர்ச்சியும் ஒரு காரணம் என்பதும் உளவியல் உண்மை தானே ? 

எத்தனையோ லட்சங்களை வாங்கும் பள்ளிகள் தங்கள் வளாகத்திலேயே உளவியல் ஆலோசகர்களை நியமித்து தனித்து தெரியும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பொதுவாகவும் எல்லோருக்கும் உளவியல் ஆலோசனைகள் வழங்குவது குறித்தும் ஏன் நாம் யாருமே பேசமாட்டேன் என்கிறோம் ? 

[நியாயம் கிடைக்கச் செய்வோம் என்றிருக்கிறார் கல்வித்துறை அமைச்சர். நம்புவோம் ! அதன்பிறகும் கொலையா தற்கொலையா என நாமாக ஆராய்ந்து கொண்டிருப்பது தவறு]. வளரிளம் பருவத்தில் குழந்தைகளின் மனதில் என்னென்ன மனமாற்றங்கள் எல்லாம் நிகழும் ? என்னென்ன முடிவுகளைக் கணநேரத்தில் எடுப்பார்கள் ? என்பதைப் பெற்றோர் மட்டுமல்ல ; எவராலுமே யூகிக்க முடியாது. அவர்களுக்குத் தேவை.. கவுன்செலிங். அவர்களுக்குப் படிப்பையும் எதிர்காலக் கனவையும் எங்களை மாதிரி விவரமறிந்த பெற்றோரும்கூட திணிக்கத் தானே செய்கிறோம். அதில் எத்தனை எத்தனை மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர் பிள்ளைகள் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

 ஜாலியாக இருக்கும் பிள்ளைகள் கூட இதைத்தாண்டி எளிதில் தேறி வந்து விடுகிறார்கள். ஆனால் பெற்றோர்களின் கஷ்டமறிந்து பொறுப்புணர்ந்து சாதிக்க நினைக்கும் பிள்ளைகள் தான் இதில் பலிகடாக்கள் ஆகி விடுகின்றனர். தன் பெற்றோர் மனம் வருந்தி விடக்கூடாதே என்று தன்உணர்வுகளையும் அம்மா அப்பாவிடத்திலும் மறைத்துக்கொண்டு 'சரிம்மா சரிங்கப்பா' எனத் தலையாட்டி விட்டு தனக்குள் குமைந்து சாகிறார்கள் !

இதைத்தான் நான் முகநூல் வந்த புதிதில் எழுதிய அடலொசன்ட் ஒன்லி தொடரிலும் ஆங்காங்கே குறிப்பிட்டிருந்தேன். என்னைப் பொறுத்த வரையில் இந்த மாதிரியான அசம்பாவித நிகழ்வுகளுக்கு தற்போதைய உடனடி மற்றும் நிரந்தரத் தீர்வும் தேவையும் .. எல்லா பள்ளிகளிலும் பிள்ளைகளிடம் உளவியல் நாடிபார்த்து பேசி உற்சாகப்படுத்த ' உளவியல் நண்பன் .. அதாவது Peer Educator'. ஒவ்வொரு அரசு / தனியார் பள்ளியிலும் இவன்/ இவள் இருந்தால் .. இந்தமாதிரி அசம்பாவிதங்கள் முற்றுபெறும்//

மற்றபடி அந்த அபலைத் தாய்க்கும் இறந்த மகளுக்கும் நீதி கிடைக்கட்டும் என்பதே எனது வேண்டுதலும் விருப்பமும்.. கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.