தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் புகார் மனு கொடுக்கவந்த பெண்ணை தலையில் அவர் கொடுத்த மனுவை கொண்டு அடித்தது மிக பெரிய சர்ச்சையை உண்டாக்கியது பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்.
மேலும் அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார், இந்த சூழலில் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன். அதில் பெண்ணை அடித்தது உரிமையில் தானாம் மேலும் அவரை சாந்த படுத்தவே அவ்வாறு அவர் அடித்தார் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனிடம் பேசியதாவது "எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக நான் அரசியலில் இருப்பவன். நான் எப்படிப்பட்டவன் என்பது என் தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். அனைவரிடத்திலும் அன்போடு பழகக்கூடியவன். வேற்றுமை பாராதவன். தகுதி பார்த்தோ, தரம் பார்த்தோ பழகமாட்டேன். எல்லோரையும் சமமாகவே மதித்து இப்போது வரைக்கும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன்.
என் தொகுதி மக்களும் என்னை மாமா, தாத்தா என்று முறை சொல்லி பழகி வருகின்றனர். பாலவநத்தத்தில் நடைபெற்ற வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் என்னை சந்தித்த கலாவதி, எனக்கு உறவினர் பெண்.
பொதுவாக அனைவரிடமும் அமைச்சர் என்ற அந்தஸ்தோடு பழகாமல் அவர்களுக்குள் ஒருவனாகவே பழகுவது தான் எனது இயல்பு. அந்த உரிமையில் தான் அவர்கொடுத்த மனு கவரை வைத்தே கலாவதியை உரிமையோடு தலையில் தட்டி அமைதிப்படுத்தினேன்.
நான் தொகுதி மக்களிடம் உரிமையெடுத்து பழகியதை ஏற்க முடியாமல் பா.ஜ.க.வின் அண்ணாமலை இதை அரசியலாக்க பார்க்கிறார். இதனால் எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது. அரசியலில் எனக்கு இருக்கும் அனுபவம் அண்ணாமலையின் வயதுகூட கிடையாது.
ஒரே தொகுதியில் 9 முறைக்கும் மேல் மக்கள் சேவகனாக பணியாற்றும் என்னைப்பற்றி, என் தொகுதி மக்களுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்கு தெரியும். நான் யார் என்பது அண்ணாமலை வந்து சொல்லித்தான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டியதில்லை" என்றார் அமைச்சர்.
அதாவது பெண்ணை அடித்தது உரிமையில் என விளக்கம் கொடுத்து இருக்கிறார் அமைச்சர். இதுவும் தற்போது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.