திமுக முக்கிய தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் இவரின் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைதும் செய்தனர். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் சிறை வசம் உள்ளார். இதுவரை செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகி வருகிறது.உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 1996 - 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. இவர் மீது நில அபகரிப்பு வழக்கு, செம்மண் அள்ளிய வழக்கு போன்று ஊழலில் சிக்கி, இவரது வழக்கும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இவர்களை தொடர்ந்து திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை இன்று காலையில் இருந்து சோதனை தொடங்கியுள்ளனர். ரோம்பேட்டை ரேலா மருத்துவமனை, பூந்தமல்லி சவிதா மருத்துவமனை, குரோம்பேட்டையில் உள்ள எம் பி ஜெகத்ரட்சகன் வீடு, தி.நகரில் உள்ள ஓட்டல், குரோம்பேட்டையில் உள்ள எம்.பி.யின் உறவினர் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தி நகர், அடையாறு, குரோம்பேட்டை, தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜெகத்ரட்சகருக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் சென்றபோது அந்த வீடு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வந்துள்ளன.
பாதுகாப்பு படையினர் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உதவியுடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிக்கியது முக்கிய ஆவணங்கள்...திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல், மருத்துவமனைகள் விட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இதில் கட்டுக்கட்டாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது . இவர் கணக்கில் காட்டி இருக்கும் சொத்து மதிப்பு மட்டுமே 50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்றும் இவர் தான் கிட்டத்தட்ட திமுகவின் பைனான்சியர் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக இந்த ரெய்டு இருக்கலாம் என்று அறியப்படுகிறது. மேலும் இன்று நடைபெறும் இந்த ரெய்டு மூலம் இன்னும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டு சிறைவாசம் உள்ளார். தொடர்ந்து திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.