சமூக வலைத்தளங்களில் மக்கள் அன்றாட நிகழ்வுகள் குறித்து பலர் தெரிவிக்கும் கருத்துக்களில் சிலவற்றை தேர்வு செய்து நமது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம் அந்த வகையில் ஜவஹர்லல் என்பவர் சென்னையில் தெரு பெயர்களில் உள்ள சாதி பெயர்கள் நீக்கம் குறித்து கிண்டலாக கருத்து பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-
தெருப் பெயர்களில் இருக்கும் ஜாதியை அழிப்பதாகக் கிளம்பியிருக்கிறார்கள்.வேலையில்லாத யாரோ பூனையைப் பிடித்து என்னமோ செய்ததாய் முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். (வேலையில்லாத கணக்கப்பிள்ளை பூனை முடியை எண்ணியதாய்ச் சொன்னார்களோ?) அதுதான் ஞாபகம் வருகிறது. தெருப் பெயரில் ஜாதியை ஒழிப்பதன் மூலம் எதையுமே சாதிக்க முடியாது. மேலும் சில வருஷங்களுக்கு முன் பிடுங்கிய ஆணிதான் இது.
டி. டி. கிருஷ்ணமாச்சாரி ரோடு கிருஷ்ணமா சாலை ஆனது மாதிரி காமெடிகள்தான் அரங்கேறினவே ஒழிய அத்தோடு ஜாதி ஒழிந்து விடவில்லை.ஜாதியை ஒழிக்க வேண்டுமானால் முதலில் எந்தத் தொகுதியில் எந்த ஜாதிக்காரர்கள் அதிகமோ அந்த ஜாதி வேட்பாளர்களை நிறுத்துவதை ஒழிக்க வேண்டும். அதற்காக சட்டம் போட வேண்டும். இதை எந்த அரசியல் கட்சியும் செய்யாது.
அடுத்து ஜாதி அடிப்படையில் சலுகைகள் வழங்குவதை விலக்கிக் கொள்ள வேண்டும். இதையும் எந்தக் கட்சி வந்தாலும் செய்யாது. செய்யவும் முடியாது. காரணம் ஒதுக்கீடுகள் என்ன நோக்கத்துக்காகத் தரப் பட்டனவோ அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. உயர்வு தாழ்வின்றி, எல்லாரையும் அணைத்துக் கொள்ளும் மனப்பாங்கு நம் சமூகத்துக்கு இன்னும் முழுவதுமாய் வரவில்லை.
அரசாங்கத்தின் எந்த விண்ணப்ப ஃபாரத்திலும் ஜாதி என்கிற Column இருக்கக் கூடாது. (மதம் என்கிற காலமும் அவசியமில்லை). இதைச் செய்வார்களோ? சேன்ஸே இல்லை.ஜாதிச் சங்கங்கள், ஜாதிக் கட்சிகள் தடை செய்யப் படவேண்டும். இதுவும் முடியாது. நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.
இப்படி, எதையெல்லாம் செய்தால் ஜாதி நிஜமாக ஒழியுமோ அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தெருப் பெயர் எழுதிய போர்டுகளில் தார் பூசிக் கொண்டிருப்பதால் என்ன பயன்?குறிப்பிட்ட விலாசத்தைத் தேடுகிறவர்களைத் திண்டாடித் தெருப் பொறுக்க வைப்பதை விடப் பெரிய சாதனை எதையும் இதனால் நிகழ்த்திவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.