தேசிய கொடியில் இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும் என மத கோட்பாட்டுடன் தொடர்பு படுத்தி எழுதிய ஆசிரியரை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எபின் (வயது 36). இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இந்தநிலையில் தாராபுரம் பள்ளி ஆசிரியர் எபின், சர்ச்சைக்குரிய வாசகம் எழுதிய தேசிய கொடியை வீட்டின் மேல் கூரையில் கட்டி உள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் எபினை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தார். அதன்பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் ரூபாய் நோட்டுக்களில் கூட இயேசு ஆசீர்வதியும் என எழுதி வந்ததும் தெரியவந்துள்ளது. தேசிய கொடி என்பதே மதத்திற்கு அப்பாற்பட்ட சூழலில் அதில் மதத்தை புகுத்திய ஆசிரியரின் செயல் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.