பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் பிரகாஷ் ஜெயின் ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைத்தூர படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால் மாணவர்கள் அங்கு சேர வேண்டாம் என யுஜிசி தெரிவித்து இருக்கின்றது. பொதுவாக எந்த ஒரு பல்கலைக்கழகமாக இருந்தாலும் தொலைதூரக்கல்வி நடத்தும் போது அதற்கான விதிமுறைகளின்படி யுஜிசியிடம் முறையாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்
ஆனால் தமிழகத்தின் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர படிப்புகளுக்கு பெறவேண்டிய முறையான அங்கீகாரம் பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தி பாடம் எடுத்து வருகிறது. இது தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை மீறும் செயலாகும். எனவே மாணவர்கள் தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்புகளை மேற்கொள்ள வேண்டாமென யுஜிசி தெரிவித்திருக்கின்றது.
மேலும் தொலைதூர படிப்புகள் பொருத்தவரையில் 2014-15 கல்வி ஆண்டு வரை அண்ணாமலை பல்கலைக்கழகம் அனுமதி பெற்று இருக்கிறது. அதாவது யுஜிசி அனுமதி வழங்கி இருக்கிறது. அதன் பிறகு தொலைதூர படிப்புகளுக்கு பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெறவில்லை. இவ்வாறு இருக்கும் நிலையில் 2015ஆம் ஆண்டிற்கு பிறகு தொலைதூர, திறந்தநிலை படிப்புகள் செல்லாதவையாக கருதப்படும். இது சார்ந்த மாணவர்களின் வேலைவாய்ப்பு உயர் கல்வி ஆகியவற்றில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதற்கு முழு பொறுப்பு பல்கலைக்கழகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என தெரிவித்து உள்ளது.
மேலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 200க்கும் மேற்பட்ட தொலைதூர படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் நிலைமை இனி என்னவாகும் என்ற கேள்வி குறி தற்போது எழுந்து உள்ளதால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட தொலைதூர படிப்புகளில் பயின்றுவரும் மாணவர்களின் நிலைமையும் தற்போது வேலையில் இருந்தால் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல் குறித்தும் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது. இதற்கான விடை எப்போது கிடைக்கும் என்ற அச்சத்தில் மாணவர்கள் இருக்கின்றனர்.