கொரோனா பொது முடக்கம் காரணமாக மத்திய அரசு பொருளாதார மீட்பு நடவடிக்கை, கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவது அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது என பல்வேறு விஷயங்களில் முக்கியத்துவம் கொடுத்து வந்தது,அத்துடன் உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் வந்ததால் அதில் கவனம் செலுத்தியது பாஜக.
இந்த சூழலில் பாஜக மீண்டும் தனது அதிரடியை தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, அதன் படி மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு பதிலாக இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார், இது பெருத்த விவாதத்தை உண்டாக்கியுள்ளது பாஜகவிற்கு எதிர் திசையில் அரசியல் செய்யும் பல்வேறு கட்சிகள் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து தெரிவித்ததாவது "ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. 'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் திரு. அமித் ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது!
ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என குறிப்பிட்டு இருக்கிறார், இந்த சூழலில் இது வெறும் சாம்பிள்தான் எனவும் பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக உத்திர பிரதேஷ், உத்திரகாண்ட் மாநிலங்களில் இதனை அமல்படுத்தவும் அதன் பிறகு நாடு முழுவதும் அதனை சட்டமாக கொண்டுவரவும் உள்துறை அமைச்சகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது, தற்போது மாநிலங்களவையிலும் பாஜகவிற்கு என 100 எம்.பிகள் இருப்பதால் துணிந்து களம் இறங்க பாஜக தயாராகிவிட்டதாம்.
இனி வரும் நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.