24 special

தமிழகத்திற்கு மோடி போட்ட 70,000 கோடி அஸ்திவாரம்! ஸ்டாலின் ஒட்டிய ஸ்டிக்கர்! மொத்தமாக வெளிவந்த உண்மை

PMMODI,MKSTALIN
PMMODI,MKSTALIN

தமிழகத்தில் ‘கப்பல் கட்டும் புதிய கொள்கை 2026’-ஐ முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பெரும் ஆரவாரத்துடன் வெளியிட்டிருக்கிறார். ஆனால், இந்தக் கொள்கையின் பின்னால் இருக்கும் நிஜமான ‘கேப்டன்’ யார் என்று பார்த்தால், அது பிரதமர் மோடி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த பிரம்மாண்டமான திட்டங்களுக்கு ‘கடல் ஸ்டிக்கர்’ ஒட்டித் தனது சாதனையாகக் காட்ட முயன்று, இப்போது தரவுகளிடம் திமுக அரசு வசமாகச் சிக்கியுள்ளது.


உண்மையில், இந்தியாவில் கப்பல் கட்டும் தொழிலைப் புரட்சிகரமாக மாற்றியது மோடி தலைமையிலான மத்திய அரசுதான். 2025 செப்டம்பரில் மத்திய அமைச்சரவை ₹69,725 கோடி மதிப்பிலான ‘கப்பல் கட்டும் நிதியுதவித் தொகுப்பை’ (SBFAS 2.0) அறிவித்தது. இதில் ₹25,000 கோடி கடல்சார் வளர்ச்சி நிதியாகவும், ₹24,736 கோடி நேரடியாகக் கப்பல் கட்டும் மானியமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இமாலயத் திட்டத்தின் பயன்களைத்தான் இப்போது திமுக அரசு தன் கணக்கில் எழுதிக்கொள்ளப் பார்க்கிறது.

மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ் தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி மற்றும் காமராஜர் துறைமுகங்கள் ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாயில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. மோடி அரசு கொண்டு வந்த ‘கடல்சார் அமிர்த கால தொலைநோக்கு 2047’ (Maritime Amrit Kaal Vision 2047) திட்டம்தான், இந்தியாவை உலகின் டாப் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தத் தேசிய இலக்கைத் தமிழக அரசு தனது மாநிலக் கொள்கையாகத் திரித்துக் கூறுவது அப்பட்டமான கண்துடைப்பு.

பிரான்ஸ் நாடாளுமன்றத்துடன் மோடி அரசு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களால்தான், இன்று இந்தியாவில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. ஜப்பான், கனடா போன்ற நாடுகளுடன் பிரதமர் ஏற்படுத்திய வர்த்தக உறவுகளால்தான், ‘இந்தியாவில் கப்பல் கட்டினால் செலவு குறைவு’ என்ற உலகளாவிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, “நாங்கள் கொள்கை வகுத்ததால் முதலீடு வருகிறது” என திமுக கூறுவது நகைப்புக்குரியது.

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் முதல் மத்திய அரசின் எய்ம்ஸ் வரை அனைத்திலும் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இப்போது தூத்துக்குடியில் அமையவுள்ள கப்பல் கட்டும் கிளஸ்டர் கூட மத்திய அரசின் வ.உ.சி துறைமுகப் பொறுப்புக் கழகத்துடன் இணைந்துதான் நடைபெறுகிறது. ரியல் எஸ்டேட் மற்றும் நில விவகாரங்களில் காலத்தை விரயம் செய்வதை விட்டுவிட்டு, ஆளுங்கட்சியினர் கடல்சார் தொழில்களில் கவனம் செலுத்தட்டும். ஆனால், புகழை மட்டும் ‘கப்பலோட்டிய திராவிடன்’ எனத் திருடுவது நியாயமல்ல.

கப்பல் கட்டும் தொழில் என்பது சாதாரணமானதல்ல; அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான அச்சாணி. மோடி அரசு விதைத்த விதையைத் தனது செடி என உரிமை கோரும் திமுகவின் இந்த விளம்பர உத்தியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எது எப்படியோ, மத்திய அரசின் திட்டங்களை மறைக்காமல், மாநில வளர்ச்சிக்கு உண்மையுடன் உழைப்பதே ஒரு அரசுக்கு அழகு.