
தற்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகி இருப்பது துணை குடியரசு தலைவர் தேர்தல் தான். இதற்கு முன் குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையைக் காரணமக ராஜினாமா செசெய்ததை தொடர்ந்து குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கின. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகதமிழகத்தை சேர்ந்த சி.பி இராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இது இந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கொங்கு பகுதிகளில் பா.ஜ.க வலுவாக இருக்கும் நிலையில், மீண்டும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தமிழருக்கு மிக முக்கியமான பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ. க மிகமுக்கியமான வாய்ப்பை அளித்திருக்கிறது. இதன் மூலமாக திமுகவுக்கும் புதிய சிக்கல் ஒன்றை பாஜக ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் 2வது முறையாக பொறுப்பில் இருக்க விரும்பினார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பாக அப்துல் கலாமிற்கு ஆதரவு அளிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் தமிழரான அப்துல் கலாமிற்கு திமுக ஆதரவு அளிக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கலாம் என்றாலே கலகம்தான் என்று பதில் அளித்தார். அதேபோல் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரைத் தான் ஆதரிப்போம் என்றும் கூறி இருந்தார்.
இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தே அப்துல் கலாம் விலகினார். இதனால் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்க திமுக ஆதரிக்கவில்லை என்ற பழியை இப்போதும் எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் செல்லும் போதெல்லாம் திமுக மீது இந்த விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் வைக்கப்படும்.
அண்மையில் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் சென்ற போது கூட இந்த விமர்சனத்தை முன் வைத்தார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழரான சிபி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்து, பாஜக மீண்டும் திமுகவுக்கு சிக்கலில் தள்ளி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியா கூட்டணி சார்பாக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், தமிழருக்கு கூட திமுக ஆதரவு அளிக்கவில்லை என்ற விமர்சனத்தை பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் முன் வைக்கும்.
இதனால் அப்துல் கலாம் பாணியை போலவே மீண்டும் திமுகவுக்கு பாஜக சிக்கலை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலமாக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுகவுக்கு பாஜக செக் மேட் வைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுகவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தமிழருக்கு துணை ஜனாதிபதி பதவியை பாஜக வழங்க உள்ளது. இதன் மூலமாக பாஜகவின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்ய முடியும் என எதிர்பார்க்கிறது பாஜக மேலிடம். தமிழ்நாட்டிற்கு பாஜக முக்கியத்துவம் அளித்திருக்கிறது என்பதைக் கொங்கு மண்டல மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய முடியும் என்று கருதுகிறது.
மேலும், சி.பி ராதாகிருஷ்ணன், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர் என்பதும் பாஜகவுக்கு தேர்தல் களத்தில் பிளஸ்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கு செலுத்தி வரும் நிலையில், இந்த நகர்வுகளின் மூலம் மீண்டும் கொங்கு மண்டலத்தில் அதிமுக - பாஜக கூட்டணி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.