கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஸ்ரீமதி மரணமும் அதனை தொடர்ந்து நடைபெற்ற கலவரமும் அனைவருக்கும் தெரிந்த விஷயம், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்த சம்பவம் கள்ளக்குறிச்சி கலவரம்.
ஆளும் திமுக அரசிற்கும் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் உளவுத்துறை என இரண்டு அமைப்புகளும் தோல்வி அடைந்து விட்டதாக வெளிப்படையாக பலர் கருத்து தெரிவித்தனர், உலகம் முழுவதும் இருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வீரர்கள் தமிழகம் வர காத்திருந்த சூழலில் நடைபெற்ற கலவரம் திமுக அரசிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதையடுத்து சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் உளவுத்துறை இரண்டையும் கடுமையாக முதல்வர் சாடி இருக்கிறார், அதன் வெளிப்பாடாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றப்பட்டனர், இந்த சூழலில் தான் விசாரணையை தீவிர படுத்தியது காவல்துறை.
கலவரம் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது, அவர்களின் முதல்கட்ட விசாரணையில் பள்ளியை விசிக மற்றும் இன்னும் பிற அமைப்புகள் சேர்ந்து தாக்கியதாக அவர்களின் சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு, ஆங்கில நாளிதழ் ஒன்றில் உளவுத்துறை தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கில் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன, விசிகவை சேர்ந்த வன்னியரசு பட்டியல் சமுதாய இளைஞர்களை குறிவைத்து கைது செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் 60 மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யபட்டு இருப்பதாகவும் காவல்துறை செயல்பாட்டை கண்டித்து அறிக்கை கொடுத்தார்.
இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உளவுத்துறை செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார், மாணவி ஸ்ரீமதி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது.
கீழுள்ள ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது.
இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் ஸ்ரீமதியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த சூழலில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கலவரம் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் சிலர் தங்களுக்கு சாதகமாக பள்ளியின் உள்ளே நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு இருக்கிறது.
மொத்தத்தில் தங்கள் மீது விழுந்த கரும் புள்ளியை அகற்ற காவல்துறை உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதால் கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளியாகலாம் என்றும் பல அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.