கர்நாடகா : பிஜேபி ஆளும் மாநிலங்களில் அதிரடி முடிவுகளை நடைமுறைப்படுத்துவதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. அந்த மாநிலத்தின் முதலமைச்சரான பசவராஜ் பொம்மை ஹிஜாப் சர்ச்சையின்போது அந்த சர்ச்சையை கையாண்டவிதமும் சட்டம் ஒழுங்கை பாதுகாத்த விதமும் கர்நாடக மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களையுமே புருவத்தை உயர்த்த வைத்தது.
இந்நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை கண்ணீர்விட்டு கதறியழுதது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. கடந்த ஜூன் 10 அன்று கன்னட திரைப்படமான சார்லி 777 வெளியாகியிருந்தது. அந்த திரைப்படம் ஒரு மனிதனுக்கும் அவனது செல்லப்பிராணியான சார்லிக்கும் இடையேயான பாசப்பிணைப்பை பற்றிய கதையம்சத்தை கொண்டது.
இந்த திரைபடம் வெளியான முதல்நாளில் இருந்தே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். படமும் கர்நாடக மாநிலத்தில் வசூலில் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த திரைப்படத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை திரையரங்கில் சென்று பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது " இந்த திரைப்படத்தை ஒவ்வொருவரும் பார்க்கவேண்டும். என்னை கலங்க வைத்த திரைப்படம் இது. நாய்களை பற்றிய படங்கள் ஆயிரம் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த திரைப்படம் விலங்குகளின் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. நிபந்தனையற்ற அன்பை பற்றி எப்போதுமே நான் பேசிவருகிறேன்.
ஒரு நாயின் காதல் என்பது நிபந்தனையற்ற அன்பு. அது தூய்மையானது" என செய்தியாளர்களிடம் முதல்வர் பொம்மை தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் பசவராஜ் பொம்மையின் செல்லப்பிராணியான ஸ்னூபி இறந்தது. அதை அடக்கும்செய்யும்போது முதல்வர் கதறியழுத புகைப்படத்தையும் தற்போது கதறியழுத புகைப்படத்தையும் நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர்.