புதுதில்லி : கடந்த திங்கட்கிழமை மிசௌரியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆப் அட்மினிஸ்ட்ரேஷனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது இந்தியா எதிர்காலத்தில் முழு அளவிலான போருக்கு தயாராக இருக்கவேண்டும் என கூறினார்.
சீனா எல்லைக்கோட்டு பகுதியில் 50000 முதல் 60000 வரை தனது வீரர்களை நிறுத்தியுள்ளதுடன் 25க்கும் மேற்பட்ட முன்னணி போர்விமானங்களை எல்லைப்பகுதியில் உள்ள விமானதளங்களில் நிலைநிறுத்தியுள்ளது. அதேபோல இந்தியா தரப்பிலும் 60000 வீரர்கள் மற்றும் போர்விமானங்கள் நவீன ராடார்கள் மற்றும் பீரங்கிகளை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் மத்திய அமைச்சரின் உரை உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய அமைச்சர் மேலும் கூறுகையில் " சைபர் மற்றும் பிராக்சி போர்களால் நாடுகளின் பாதுகாப்பு சவால் நிறைந்ததாக மாறிவிட்டது. போர் புரிவது என்பது இந்தியாவின் குணாதிசயத்தில் இல்லை. போரை இந்தியா எப்போதுமே விரும்புவதில்லை. இந்தியா எப்போதுமே அமைதியை மட்டுமே நம்புகிறது. ஆனால் அது போராக மாறும்போது அல்லது மாற்றப்பட்டால்,
இந்தியாவை எந்த நாடு தாக்குகிறதோ அது கடுமையாக பாதிக்கப்படும். ஏனெனில் இந்தியா இந்தியா தனது வலிமை மிகுந்த ஆயுதங்களை விட தனது மனஉறுதியால் போராடுகிறது. நமது அண்டை நாடுகளின் சூழ்ச்சியை தந்திரங்களை நாம் அறிவோம். அதனால் எதிர்காலத்தில் முழு அளவிலான போருக்கு நாம் தயாராக வேண்டும்.
ஆயுதப்படைகள் மற்றும் சிவில் நிர்வாகங்களுக்கு இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பில் மூலம் ஒரு முழு அளவிலான போருக்கான திறமையை நம்மால் மேம்படுத்த முடியும் என நான் நம்புகிறேன். தற்போதுள்ள பாதுகாப்பு சவால்களை ஆயுதப்படைகளால் மட்டுமே சமாளிக்க முடியாது. அரசின் ஒவ்வொரு நிர்வாகத்திற்கும் ஆயுதப்படைகளுக்கும் ஒரு ஒருங்கிணைப்பு வேண்டும்." என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.