
சீனா – பாகிஸ்தான் நட்பு உலகம் முழுவதும் அறிந்த ஒன்றாகும். எல்லை பிரச்சனைகள் காரணமாக இந்தியாவுடன் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நெருக்கம் உருவானது.பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவது, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கடன் மற்றும் மானியமாக நிதியை சீனா வழங்கி வந்தது. தற்போது இந்தியா, சீனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் முக்கிய ரெயில்வே திட்டத்துக்கு சீனா நிதி வழங்க மறுத்துள்ளது.
பாதுகாப்புத் துறையில் பாகிஸ்தான் பெரிதும் சீனாவையே நம்புகிறது. பாகிஸ்தான் பயன்படுத்தும் ராணுவ உபகரணங்கள், போர் விமானங்கள், டிரோன்கள் என அனைத்திலும் சீனாவின் பங்கு மிக அதிகம். அதோடு, சாலை, துறைமுகம், எரிசக்தி திட்டங்கள் உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு பணிகளுக்கும் சீனா பில்லியன் கணக்கில் நிதி கொடுத்துள்ளது.இந்த ஒத்துழைப்பின் உச்சமாகவே சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்கீழ் பல சாலை, ரயில்வே, ஆற்றல் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.
இதற்கிடையே பாகிஸ்தானின் முக்கியமான கராச்சி – ரோஹ்ரி ரயில்வே பிரிவு மேம்பாட்டு திட்டத்தை பாகிஸ்தான் மேற்கொள்ள முடிவு செய்தது. இதற்கான நிதியை சீனாவிடம் கேட்டது. ஆனால், சீனா திடீரென அந்த நிதியை வழங்க மறுத்ததோடு, திட்டத்திலிருந்தே விலகி விட்டது. இது பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகிஸ்தான், திட்டத்திற்கான நிதியை பெற ஆசிய மேம்பாட்டு வங்கியை (ADB) நாடியுள்ளது. 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கடன் கோரிக்கை ஏற்கனவே வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் ஐந்து ஆண்டுகளாக விரிசலில் இருந்த இந்தியா சீனா உறவு தற்போது மீண்டும் உயிர் பெற தொடங்கியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு மேற்கொண்ட பயணம் இருநாட்டு உறவையும் மிக முக்கியமான ஒரு கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை மற்றும் வர்த்தக மோதல்கள் காரணமாக இந்தியாவும் சீனாவும் மீண்டும் நெருங்கி வர தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானின் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டத்திற்கு அளித்து வந்த நிதியுதவியை திடீரென சீனா நிறுத்தி வைத்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீனா ஏற்கனவே பல லட்சம் கோடிகளை பாகிஸ்தானில் முதலீடு செய்திருக்கிறது அதுவே எப்பொழுது தங்களுக்கு திரும்ப வரும் என்பது தெரியாது என்ற சூழலில் மேற்கொண்டு அங்கே பணத்தை செலவழிப்பதற்கு தயாராக இல்லை என கூறப்படுகிறது .
பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெருங்கி வருவதும் சீனாவின் இந்த திடீர் முடிவுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் ஒரு நட்பு தேவை என்பதற்காக மற்றொரு நட்பை நாங்கள் தியாகம் செய்துவிட மாட்டோம் என வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு காரணங்களுமே சீனாவின் அணுகுமுறையை மாற்றியதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
பாகிஸ்தான் பல தசாப்தங்களாக சீனாவின் “மிகச் சிறந்த நண்பன்” என்று கருதப்பட்டாலும், தற்போது பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெருக்கம் காண்பிக்கும் விதமும், இந்தியா – சீனா பொருளாதார ஒத்துழைப்பும், பாகிஸ்தானை பின்தள்ளியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சீனாவின் இந்த முடிவு, பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ராணுவ தளபதியை அமெரிக்கா கௌரவித்த நிகழ்வே, பாகிஸ்தானுக்கு சீனா அளித்த “அதிரடி அடிக்கு” காரணமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.