
அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதிக்கப் போட்டிகளுக்கு இடையே, இந்தியா தனது பொருளாதார இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் ஒரு மாபெரும் ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளது. 2026-ம் ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிரடி வரிவிதிப்பு நடவடிக்கைகள் உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ள சூழலில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து மேற்கொள்ளும் இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உலக ஒழுங்கை அடியோடு மாற்றியமைக்கும் ஒரு 'கேம் சேஞ்சராக' பார்க்கப்படுகிறது.
சுமார் இரண்டு தசாப்தங்களாக நீடித்த இழுபறிக்குப் பிறகு, தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ள இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், உலகப் பொருளாதார வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதவிருக்கிறது. 200 கோடி மக்களைக் கொண்ட ஒரு பிரம்மாண்ட சந்தையையும், உலகளாவிய ஜிடிபியில் 25 சதவீதப் பங்களிப்பையும் கொண்ட இந்த ஒப்பந்தம், இந்தியாவின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு துருப்புச் சீட்டாகப் பார்க்கப்படுகிறது. வல்லரசு நாடுகளின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியா முடங்கிப் போய்விடாமல் ஐரோப்பாவின் 27 நாடுகளுடன் கைகோர்ப்பது என்பது இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதித் துறைக்கு ஒரு புதிய உயிர்நாடியைத் தந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட ஜவுளி, ஆபரணங்கள் மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புத் துறையினருக்கு ஐரோப்பிய சந்தை ஒரு மாபெரும் வாய்ப்பாக அமையும். அதேபோல, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சூரிய ஆற்றல் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை இது பலப்படுத்தும். முக்கியமாக, சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்தத் தருணம் மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வெறும் வர்த்தகம் சார்ந்தது மட்டுமல்லாமல், பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற முக்கிய விவகாரங்களில் ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவை மிக நெருக்கமாக இணைக்கிறது.
இந்தியாவின் இந்த ராஜதந்திர நகர்வில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தனது சுய நலன்களைக் காப்பதில் இந்தியா காட்டிய உறுதிதான். நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயம் மற்றும் பால் பொருட்கள் துறையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், அவற்றை இந்த ஒப்பந்தத்தில் சேர்க்காமல் தவிர்த்திருப்பது இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை உணர்த்துகிறது. அதே நேரம், 90 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க முன்வந்தது இந்தியாவின் தாராளமயமான வர்த்தகக் கொள்கையைக் காட்டுகிறது. இதன் மூலம் இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையில் புதிய பாய்ச்சல்கள் நிகழவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னுதரணமாக குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பங்கேற்பதும், அதன் தொடர்ச்சியாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதும் இந்தியாவிற்கு உலக அளவில் வழங்கப்பட்டுள்ள கௌரவமாகும். கடந்த சில ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த ஒப்பந்தம் அதன் தாக்கம் காரணமாக "அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்" என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. 2047-ம் ஆண்டிற்குள் வளர்ந்த பாரதம் என்கிற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கும் இந்த வேளையில், ஐரோப்பாவுடனான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக உறவு இந்தியாவைப் பொருளாதாரப் புலியாக உலக அரங்கில் சிம்மாசனமிட்டு அமரச் செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
