24 special

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.."ஏதோ ஒரு தீர்ப்பு உடனே கொடுங்க"..! செம்ம டென்ஷனில் எடப்பாடி!

Opsandeps
Opsandeps

தமிழக அரசியலில் புயலை கிளப்பிய சம்பவம் அதிமுகவில் உண்டான பிளவு பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள்  மூலம்  ஓபிஎஸ் -ஈபிஎஸ் என மாறி மாறி நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் வெற்றி தோல்விகளை இரண்டு தரப்பிற்கும் கொடுத்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் பலத்த பின்னடவை எடப்பாடி பழனிசாமி தரப்பு சந்தித்துள்ளது.


அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு  தீர்ப்பு அளித்ததை எதிர்த்து கட்சியின் ஒருங்கினைபாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அதில் இரு நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென அவர் கூறியிருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி  அமர்வு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் மனுவில் ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவை கட்சி முறைப்படி முறையாக நடத்தப்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மையில்லை என்றும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மட்டுமே அவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக தீர்மானங்களை பற்றி அவர் கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறியிருந்தார். எனவே ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் மனுவில் கூறியிருந்தார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்; இந்த வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களை பொருத்தவரையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

ஏனெனில் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த விவகாரம் என்பதால் 6 மாதங்கள் ஆகிறது. எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ஓபிஎஸ் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது மேலோட்டமாக பார்த்தால் தீர்ப்பு ஒத்திவைக்கபட்ட நிகழ்வாக இருந்தாலும் அதிமுக திருத்தப்பட்ட விதிகளின் படி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பொது செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சட்ட விதிகளை மாற்றி இருக்கிறார்கள் அதன் படி எடப்பாடி பழனிசாமி தற்போதுவரை இடைக்கால பொது செயலாளராக மட்டுமே இருந்து வருகிறார்.

தொடர்ச்சியாக நீதிமன்ற தீர்ப்புகளுக்காக காத்து இருந்தால், கட்சியில் பல தலைவர்கள் ஓட்டம் எடுக்கும் சூழல் உண்டாகலாம் என்பதால் உடனடியாக கால அவகாசம் இல்லாமல் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என எடப்பாடி தரப்பு வலியுறுத்தியதாம். ஆனால் ஒரு வார காலம் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கை ஏற்கப்பட்டு இருப்பதால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.