
திமுக அரசின் மீது எழுந்துள்ள இந்த விஸ்வரூப ஊழல் புகார்கள், "விடியல் அரசு" என்று தங்களை அழைத்துக்கொள்ளும் கட்சியின் உண்மை முகத்தைத் திரைகிழிப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் ஏழை, எளிய மாணவர்களின் கனவுகளைச் சிதைத்துவிட்டு, ஒரு பணியிடத்திற்கு ரூ. 25 முதல் 35 லட்சம் வரை வசூலித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, திமுகவின் சமூக நீதிப் பேச்சுகள் அனைத்தும் வெறும் கண்துடைப்பு என்பதை உறுதிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் பணி நியமன முறைகேடு தொடர்பான விவகாரம், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள வேளையில், ஆளுங்கட்சியான திமுக-விற்கு பெரும் அரசியல் நெருக்கடியையும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்குத் தலைவலியையும் உருவாக்கும் ஒரு முக்கியத் திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.
நகராட்சித் துறையில் காலியாக இருந்த ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதில் பல நூறு கோடி ரூபாய் கைமாறியதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, தகுதியான நபர்களைப் புறக்கணித்துவிட்டு, லஞ்சம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மத்திய அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் திரட்டியுள்ளது. இந்த ஆதாரங்களை தமிழகக் காவல்துறைத் தலைவரிடம் (DGP) ஒப்படைத்த அமலாக்கத்துறை, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், மாநில காவல்துறை தரப்பில் எவ்வித நேரடி நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
நீதிமன்ற விசாரணையின் போது அரசுத் தரப்பு முன்வைத்த வாதங்கள், நீதிபதிகளின் கடுமையான கேள்விகளால் முறியடிக்கப்பட்டன. இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டபோது, நீதிமன்றம் அதைத் திட்டவட்டமாக நிராகரித்தது. அரசியல் பின்னணிகளைத் தாண்டி, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மை மற்றும் வழக்கின் தீவிரத்தையே தாங்கள் கவனத்தில் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அமலாக்கத்துறை வழங்கிய வலுவான ஆதாரங்கள் இருக்கும்போது, ஏன் இன்னும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினர். சட்டத்தின்படி முகாந்திரம் இருக்கும்போது நடவடிக்கை எடுக்கத் தாமதிப்பது ஏன் என்ற நீதிமன்றத்தின் தொனி, அரசு நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
ஏற்கனவே செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை சென்ற பிறகும், திமுக அரசு அதிலிருந்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை. தற்போது கே.என். நேருவின் துறையிலும் எழுந்துள்ள இப்புகார், திமுகவின் அமைச்சரவையே ஊழல் கூடாரமாக மாறியுள்ளதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. "அரசியல் காழ்ப்புணர்ச்சி" என்று கூறி தப்பிக்க முயன்ற அரசுக்கு, நீதிமன்றம் வைத்துள்ள குட்டு மிக முக்கியமானது. ஆவணங்கள் தெளிவாக இருக்கும்போது, அரசு ஏன் தயங்குகிறது என்ற நீதிமன்றத்தின் கேள்வி, திமுகவின் நிர்வாகத் திறமையின்மையையும், ஊழலைப் பாதுகாக்கும் போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, புதிய திட்டங்களை அறிவித்து மக்களைக் கவர திமுக முயன்றாலும், இது போன்ற பிரம்மாண்ட ஊழல் புகார்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளன. மதுபான ஊழல், மணல் கொள்ளை, தற்போது அரசுப் பணி நியமன ஊழல் எனத் தொடர்ச்சியான புகார்கள் திமுகவின் தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் காரணியாக மாறியுள்ளன.
