24 special

அட போப்பா... லாரி உரிமையாளர்களே சொல்கிறார்கள்... அப்புறம் என்ன? வண்டி வண்டியா கழுவி ஊத்திய ஜெயக்குமார்..!

Jayakumar
Jayakumar

ஆளும் திமுக ஆட்சி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு குற்றச்சாட்டை அதிரடியாக எடுத்து முன்வைத்துள்ளார். அந்த வகையில்..


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கின்றது. பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அத்துமீறுகின்றனர். மாமூல் வசூல் செய்வது தொடர்கதையாக இருக்கிறது. இவர்கள் திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு தேவையில்லாத வேலையை செய்கின்றனர். திராவிட மாடல் என்றால் சமத்துவம், கல்வி, சமூகம், சமூக நீதி, பொருளாதாரம்- இதில் தமிழக மக்களை உயர்த்த வேண்டும். ஆனால் இவர்கள் செய்வது அதற்கு நேர்மாறானது.

சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது; அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லை; ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்; பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை; தொடர்ந்து விலைவாசி உயர்வு இப்படி இருக்கும் போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்று பெரிதாகப் பேசுகிறார்கள். அதற்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. நாங்கள் சொல்வதைக் காட்டிலும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். 

பல மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் போது, ஏன் தமிழகத்தில் குறைக்கவில்லை என்று... அதுவும் அல்லாமல் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான விலை குறைக்கும் போது மாநில அரசு அதனை குறைக்காமல், மீண்டும் மீண்டும் மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டே இருக்கின்றது.

Lஇதுதவிர கேஸ் மானியமாக 100 ரூபாய் தருவதாக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். எங்கு சென்றது அந்த அறிவிப்பு எல்லாம்? யாருக்காவது கொடுத்தார்களா? இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கொரோனா  குறைந்து தமிழகத்தின் பொருளாதாரம் உயரும் போது, சொத்து வரியை ரத்து செய்வோம் என்றார்கள்.

ஆனால் அப்படியா நடக்கிறது? இப்போது சொத்து வரியை அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்றி விட்டார்கள்.. அன்றைய எங்கள் ஆட்சியில் சொத்து வரியா, சொத்தை அபகரிக்கின்ற வரியா? என கிண்டல் செய்தார்கள்.

இதை இப்போது பொதுமக்கள் ஸ்டாலினை கேட்கிறார்கள். இதில் வேறு, பொருளாதார நிபுணர்களை அமர்த்தினார்கள். அவர்கள் என்ன அறிக்கை அளித்தார்கள்? அரசு தரப்பிலிருந்து அவர்களுக்கு செய்ய வேண்டியது எல்லாம் செய்தது தான் மிச்சம். எவ்வளவு பணம் செலவானது? இதற்கெல்லாம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


இந்தக் குழுவால் செலவுதான் அதிகம் ஆனது. உதாரணத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஆட்சியில் என்ன பொருளாதார வல்லுநர் நியமனம் செய்து ஆட்சியை நடத்தினாரா?  அல்லது அம்மா அவர்கள் இதுபோன்ற ஒரு ஆட்சியை நடத்தினாரா ? 

மக்களின் கருத்தை நாடி அவர்கள் உணர்வை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பதில் வல்லவர்களாக இருப்பவர்கள்தான் மக்களின் தலைவர்களாக கருதமுடியும். ஆனால் இவர்களுக்கு மக்களின் நாடித்துடிப்பு தெரிவதில்லை; பக்குவமும் இல்லை; அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது.

இவை அனைத்தும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. தாலிக்கு தங்கம் திட்டத்தில், 14 லட்சம் பேர் பயன் பெற்றார்கள். ஆனால் பாருங்கள் இப்போது என்னவாயிற்று? ஒரு உன்னதமான நல்ல விஷயத்தை முடித்துவிட்டு பெண்களின் சாபத்தை தான் வாங்கிக் கொள்கிறார்கள் இன்றைய ஆட்சியில் என சற்று காட்டமாக பேசியிருக்கிறார் ஜெயக்குமார். 

சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பண மோசடி வழக்கு உள்ளிட்ட சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்று ஜாமினில் வெளிவந்து விட்டார். வந்தவர் சற்று அமைதியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டால் அதிமுக மற்றும் மக்கள் மத்தியில் ஒரு ஹீரோவாக வலம் வருகிறார். மீண்டும் அதே கலகலப்பு, அதே எதிர் தாக்குதல் என எதைக் கேட்டாலும் பளிச்சென்று பதிலளிக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.