புதுதில்லி : இந்திய மக்களவையின் 17 ஆவது சபாநாயகரான பிஜேபியை சேர்ந்த ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அமைந்துள்ள பூண்டி தொகுதியின் எம்பி ஆவார். அமைதியான சுபாவமுடைய பிர்லா யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டார். ராஜஸ்தான் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள ஓம் பிர்லா ஆளும் கட்சி மட்டுமல்ல எதிர்க்கட்சி எம்பிக்களிடமும் நற்பெயரை பெற்றவர்.
இந்நிலையில் ஓம் பிர்லா மக்களவையில் கண்டிப்புடன் கூறிய கருத்துக்கள் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. மக்களவையில் விவாதங்களும் பரிமாற்றமும் ஜனநாயகத்தின் அழகு என கூறியுள்ளார். மேலும் எம்பிக்கள் கருத்துக்கள் கூறி சர்ச்சையில் சிக்குவது குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா பதவியேற்று நேற்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து தனது அரசியல்பயணத்தை வெற்றிகரமாக்கிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தனியார் செய்திநிறுவனத்திடம் பேசிய ஓம் பிர்லா " என்னுடைய மூன்றாண்டு காலகட்டத்தில் சபையின் சராசரி 100 சதவிகிதத்திற்கு மேலாக இருப்பது பெரும் சாதனை. இந்த 17 ஆவது லோக்சபாவில் சபை எட்டு அமர்வுகளில் 1000 மணிநேரம் செயல்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக நாட்டில் பாராளுமன்றத்தின் அழகே விவாதங்களும் கருத்து பரிமாற்றமும்தான். விவாதத்தின்போது ஒருவரையொருவர் கிண்டல் செய்வது குழிபறிப்பு வேலைகளில் ஈடுபடுவது போன்றவை ஏற்புடையது தான். ஆனால் வீண் கூச்சலும் தேவையற்ற ஆக்ரோஷ செயல்பாடுகள் முக்கியமான நேரங்களில் குறுக்கீடுகள் ஆகியவற்றை எம்பிக்கள் தவிர்க்கவேண்டும்.
அரசியல் தலைவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அடுக்கும் ஒரு மேடையாக பாராளுமன்றத்தை பயன்படுத்தக்கூடாது. நமது அரசியல் சாசனத்தின்படி அனைத்து மதங்களும் சமம்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த மதத்திற்கு எதிராகவும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
ஒரு மதம் சார்ந்த பிரச்சினைகளை பேசும்போது தங்களது அறிக்கைகள் வேறு எந்த மதத்தினரின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்திவிட கூடாது என்பதை எம்பிக்கள் நினைவில் கொள்ளவேண்டும். நமது இந்திய அரசியலமைப்பு அவரவர் மத உரிமையை கடைபிடிக்கும் உரிமையை வழங்கியுள்ளது. எம்பிக்கள் எப்போதுமே பாராளுமன்றத்தின் கண்ணியத்தையும் ஒழுங்கையும் பேணவேண்டும்" என மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.