புதுதில்லி : கொஞ்சம் புகழ் கொஞ்சம் பணம் இருந்தால் போதும். புதியதாக கட்சி தொடங்கி தாங்களும் ஒரு அரசியல்வாதி என பலர் தங்களை முன்னிறுத்திக்கொள்ள முனைகின்றனர். மேலும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறி ஊடகங்களின் கவனத்தை பெற முயற்சிக்கிறார்கள். அந்த மாதிரி கட்சிகள் எதுவும் மக்கள் நலனை கருத்தில்கொண்டு ஆரம்பிக்கப்படவில்லை என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் எண்பத்தியேழு கட்சிகளின் பதிவை ரத்துசெய்து அறிக்கைவெளியிட்டுள்ளது. தேர்தலில் கூட்டணியுடனோ அல்லது சுயேச்சையாகவோ போட்டியிட விரும்பும் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தங்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் முறையாக பதியவேண்டும். அதன்பிறகே அங்கீகாரம் கிடைக்கும்.
இதனிடையே 2021 செப்டெம்பர் நிலவரப்படி இந்தியாவில் 2,796 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளநிலையில் அங்கீகாரம் பெறாமல் பல அரசியல் கட்சிகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2001 நிலையுடன் ஒப்பிடுகையில் 300 சதவிகிதம் வளர்ச்சியாகும். வருமானவரி சலுகைக்கு ஆசைப்பட்ட பலர் பெயருக்கு கட்சி நடத்துகின்றனர்.
மேலும் அந்த கட்சியின் பெயரை வைத்து சில சலுகைகளை அனுபவிப்பதுடன் பல மோசடிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த புகார் அடுத்தடுத்து தேர்தல் ஆணையத்திற்கு பறந்ததையடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கையில் இறங்கியது. தேர்தல்களில் போட்டியிடாமலும் வருடாந்திர கணக்கை முறையாக சமர்பிக்காமலும் இருக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்போவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள பதிவுசெய்யப்பட்ட 2100 கட்சிகள் மற்றும் அங்கீகாரம் பெறாத கட்சிகள் குறித்து ஆய்வுநடத்தப்பட்டது. இதில் 87 கட்சிகள் கொடுக்கப்பட்ட முகவரியில் இயங்கவில்லை என்றும் கடந்த எந்த தேர்தல்களிலும் பங்கேற்கவில்லை என்பதும் உறுதியானதை அடுத்து 87 கட்சிகள் தேர்தல் ஆணைய பதிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.