
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 14.15. நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதலில் பாஜக கூட்டணி பலவீனம் என்ற முறையில் ஊடகங்கள் தினமும் விவாதித்து வந்தது ஆனால் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்று வருகிறது. திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் எடப்பாடியின் டெல்லி பயணம் திமுக தரப்புக்கு சற்று கிலியை கொடுத்துள்ளது. ஏனென்றால் திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல் என ஆளுநரிடம் பைலை கொடுத்த கையோடு அமித்ஷாவை சந்தித்திருப்பது தான்.
இந்த நிலையில் தமிழக அரசியலில் ஒற்றை குரலாக மாறியுள்ளது ஆட்சி மாறவேண்டும் என்ற கமனநிலை இது வெறும் சமூக ஊடக கட்டுக்கதை இல்லை அடித்தட்டு முதல் நடுத்தர வர்க்கம் வரை ஊடுருவிய மனநிலை. திமுக மீது உருவான மக்கள் வெறுப்பு, நாளுக்கு நாள் ஆழமாகி, இப்போது “திருத்தம் போதும்” என்ற கட்டத்தை தாண்டி, “இந்த ஆட்சி போக வேண்டும்” என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண அதிர்ச்சி, பால் விலை, பேருந்து கட்டணம், வரி சுமை, வேலைவாய்ப்பு மந்தம், சட்டம்–ஒழுங்கு தடுமாற்றம், போதைப்பொருள் அச்சம், பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சம் – இவை அனைத்தும் சேர்ந்து, திமுக ஆட்சியை மக்கள் வாழ்க்கையிலிருந்து துண்டித்த அரசாக மாற்றியுள்ளன. இதற்கு மேலாக, அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக எழும் ஊழல் குற்றச்சாட்டுகள், அதற்கான கைது–விசாரணை–ரெய்டு விவகாரங்கள், அரசின் மீது நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்துள்ளன. “அரசியல் பழிவாங்கல்” என்ற ஒரே பதிலை மீண்டும் மீண்டும் சொல்லுவது, மக்களிடையே இரக்கத்தை ஏற்படுத்தவில்லை; மாறாக, “ஆட்சியில் இருப்பவர்கள் தப்பிக்கத்தான் பேசுகிறார்கள்” என்ற கோபத்தை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில்தான் அமித் ஷாவின் அதிரடி அரசியல் தமிழகத்தில் புதிய வேகத்தை உருவாக்கியுள்ளது. அவர் பேசுவது தமிழகத்தின் வளர்ச்சி குறித்து வெற்றி கணக்குகள் குறித்து. அதற்காக இறங்கி அடிக்க ஆர்மபித்துள்ளார்.. திமுக மீது உருவாகியுள்ள மக்கள் வெறுப்பை அவர் ஒரு வாய்ப்பாக அல்ல, ஒரு ஆயுதமாக மாற்ற முயல்கிறார். மெகா கூட்டணி அமைப்பு, எதிர்திமுக வாக்குகளை ஒரே திசையில் திரட்டும் முயற்சி, இறங்கி வெற்றியும் கண்டு வருகிறார்.
மற்றபடி திமுக தலைமையின் பதில் பழைய பாட்டையே பாடுகிறது. “எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை”, “மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்”, “இது அரசியல் சதி” – ஆனால் தரையில் நிலைமை வேறு. அதிகாரத்தில் இருப்பவர்களின் பேச்சுக்கும், மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி, இப்போது பாலமாக இல்லாமல் பள்ளமாக மாறிவிட்டது. அந்த பள்ளத்தை இனி விளம்பரங்களாலும் மேடை பேச்சுகளாலும் மூட முடியாது.
இப்போது தமிழகத்தில் உருவாகி வருவது அலையல்ல, இது ஒரு அரசியல் புயல். அந்த புயலின் மையத்தில் மக்களின் கோபம், அதன் திசையில் அமித் ஷாவின் கணக்குகள், அதன் இலக்காக திமுக ஆட்சி. இந்த மூன்றும் ஒரே நேரத்தில் இணைந்தால், தேர்தல் நாளன்று அது வெறும் ஆட்சி மாற்றமாக அல்ல, ஒரு அரசியல் தீர்ப்பாக வெளிப்படும். மக்கள் மனநிலை இப்போது கேள்வி கேட்கவில்லை; தீர்ப்பை எழுத தயாராக உள்ளது.
