
அரேபிய மண்ணில் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் நிலைநிறுத்தப்பட்ட ஒன்று. சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் என வளைகுடா நாடுகள் முழுவதும் அமெரிக்காவின் இருப்பு மிக வலுவாக இருந்தது. எவராலும் அசைக்க முடியாத ஒரு சக்தியாகத் தங்களைக் கருதிக்கொண்டிருந்த அமெரிக்கப் படைகள், ஒருவிதமான அஜாக்கிரதையில் இருந்தன என்பதுதான் உண்மை.. அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் குவைத்தில் உள்ள அமெரிக்க முகாம் தாக்கப்பட்டது. இந்த சம்பவம், ஒட்டுமொத்த அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்தக் கேள்விகளை எழுப்பியது.
இந்தத் சம்பவத்திற்குப் பிறகு, தற்போது அரேபியாவில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ நிலைகளும் போர்க்கால அடிப்படையில் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியானத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதால், வான் பாதுகாப்புச் சாதனங்கள் அனைத்தும் முழு விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் எந்தக் கணத்திலும் செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில் அரேபிய நாடுகளில் ஐரோப்பியர்களின் பெரும் முதலீடுகள், சொத்துக்கள் மற்றும் பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இந்தச் சொத்துக்கள் அனைத்தும் ஈரானின் ஏவுகணைகளுக்கு இலக்காக மாறும் அபாயம் இருப்பதால், ஐரோப்பா இதனை ஒருபோதும் அனுமதிக்காது. இரண்டாவது மிக முக்கியமானக் காரணம் எண்ணெய் விலை. இந்தப் போர்ச் சூழல் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொடக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், எரிசக்தித் தேவைகளுக்காக ஐரோப்பா மீண்டும் ரஷ்யாவின் பக்கம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஆனால், உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவுடனான உறவு முற்றிலும் முறிந்துள்ள நிலையில், அதிபர் புதின் உதவ மாட்டார் என்பது ஐரோப்பாவுக்குத் தெரியும். இது உலகளாவிய அளவில் பெரும் பொருளாதாரச் சிக்கலைத் தோற்றுவிக்கும். இதன் காரணமாகவே, ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது கடைசி எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் தொடர்ந்து முரண்டு பிடித்தால், அமெரிக்காவுடன் இணைந்து ஐரோப்பிய நாடுகளும் தாக்குதலில் நேரடியாகக் குதிக்கத் தயாராகிவிட்டன. இந்தப் பிரச்சினையைச் சில நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் உறுதியாக இருப்பதால், இனி வரும் நாட்களில் ஈரான் மீதான அழுத்தம் பல மடங்கு அதிகரிக்கும்.
அதே சமயம், இது தங்களுக்கு ஒரு கடைசி கட்டப் போர் என்பது ஈரானின் புரட்சிகர காவல் படைக்கும் நன்றாகவே தெரியும். வாழ்வா சாவா என்ற நிலையில், இனி வீழ்ச்சி உறுதி என்பதை உணர்ந்தால், அவர்கள் மிகக் கடுமையானப் போரை நடத்திவிட்டே ஓய்வார்கள். தமிழக ஊடகங்கள் சிலவற்றில் மிகைப்படுத்தப்படுவது போல, இது ஒருபோதும் உலகப்போராக மாறாது. ரஷ்யாவோ அல்லது சீனாவோ நேரடியாக இந்தப் போரில் தலையிட வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் தங்கள் நவீன ஆயுதங்களைச் சோதித்துப் பார்க்கும் இடமாக மட்டுமே இதைப் பார்ப்பார்கள்.
வாய்மொழியாகச் சில சம்பிரதாய மிரட்டல்களை விடுத்துவிட்டு, அவர்கள் தங்கள் போக்கிலேயே இருப்பார்கள். ஈரானுக்காக ஒரு உலகப்போரைத் தொடங்கும் அவசியம் அவர்களுக்கு இல்லை. இஸ்ரேல் தொடங்கிய "ஆப்பரேஷன் கர்ஜிக்கும் இளம் சிங்கம்" என்ற ராணுவ நடவடிக்கை, இப்போது ஐரோப்பாவையும் களத்தில் இழுத்து வந்துள்ளதால் இஸ்ரேல் தரப்பு ஒருவித நிம்மதியுடன் இருக்கிறது.
