
இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் 2025-ஆம் ஆண்டு ஒரு சாதாரண ஆண்டு அல்ல. அது பல தசாப்தங்களாக நீடித்த தயக்கம், பலவீனம், சார்பு மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆண்டு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தியா இனி “பாதுகாப்பு தேடும் நாடு” அல்ல; பாதுகாப்பை உருவாக்கும், ஏற்றுமதி செய்யும் வல்லரசு என்ற புதிய அடையாளத்தை உலகிற்கு வெளிப்படையாக அறிவித்த ஆண்டாக 2025 வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
“சீர்திருத்தங்களின் ஆண்டு” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 2025-ல், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரே ஆண்டில் ரூ. 2.1 லட்சம் கோடி மதிப்பிலான 193 பாதுகாப்பு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன என்பதே. இதன் மூலம், மோடி அரசு பேசிய ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்பது வெறும் முழக்கம் அல்ல; நடைமுறையில் செயல்படும் கொள்கை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்திய ராணுவம் ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை நோக்கி காத்திருந்தது. இன்று அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ஆயுதங்கள், விமானங்கள், ஏவுகணைகள் தான் ராணுவத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளன. 156 ‘பிரசந்த்’ இலகுரக போர் ஹெலிகாப்டர்களுக்கான ரூ. 62,700 கோடி ஒப்பந்தம் மற்றும் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA-வின் உற்பத்திக்கு கிடைத்த ஒப்புதல் ஆகியவை, இந்தியாவின் வான்வழி பாதுகாப்பை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற முக்கிய திருப்பங்களாக கருதப்படுகின்றன.
2025 என்பது இந்தியாவிற்கு துல்லிய தாக்குதல் (Precision Strike) மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்தின் ஆண்டு. எங்கு தாக்க வேண்டும், எப்போது தாக்க வேண்டும், எவ்வளவு அளவில் தாக்க வேண்டும் என்பதை இந்தியா இனி கணக்கிட்டு முடிவு செய்யும் நிலைக்கு வந்துள்ளது. இது இந்தியாவின் ராணுவ திறன் மட்டுமல்ல; அரசியல் துணிச்சலின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்றுமதியில் இந்தியா இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. ரூ. 23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதி மூலம், இந்தியா இன்று பிலிப்பைன்ஸ், ஆர்மீனியா போன்ற நாடுகளுக்கு மட்டுமல்ல; அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளுக்கே ஆயுதங்கள் மற்றும் உதிரிபாகங்களை வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இது 2026-ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ. 50,000 கோடி ஏற்றுமதி இலக்கை எட்டுவது சாத்தியமே என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
தேசிய பாதுகாப்பு விஷயத்தில், மோடி அரசு 2025-ல் ஒரு விஷயத்தை உலகிற்கு தெளிவாகச் சொன்னது. “இந்தியா இனி எச்சரிக்கை கொடுக்கும் நாடல்ல; நேரடியாக பதில் கொடுக்கும் நாடு.” மே மாதம் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், எல்லை அப்பால் இருந்த பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன. அணு ஆயுத மிரட்டல்களுக்கும், பயங்கரவாத ஆதரவுக்கும் இந்தியா அடிபணியாது என்பதைக் காட்டிய இந்த நடவடிக்கை மூலம் உலகம் இந்தியா பக்கம் திரும்பியது.
உலக அரசியலில் இந்தியா இன்று எந்த ஒரு சக்தி மையத்திற்கும் அடிமை அல்ல. ரஷ்யாவுடன் பாரம்பரிய உறவுகள், அமெரிக்காவுடன் நவீன கூட்டணி, குவாட் போன்ற அமைப்புகளில் தைரியமான குரல் — அனைத்திலும் இந்திய நலன் முதலில் என்ற ஒரே கொள்கையை மோடி அரசு கடைப்பிடித்தது. இதன் மூலம் இந்தியா ஒரு சமநிலை சக்தியாக உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
ரூ. 6.81 லட்சம் கோடி பாதுகாப்பு பட்ஜெட், 16,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு, உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை — இவை அனைத்தும் 2026-ல் இந்தியாவை தற்சார்பு நிலையிலிருந்து மேலாதிக்க ராணுவ சக்தியாக மாற்றும் அடித்தளமாக அமைந்துள்ளன.மோடி தலைமையில், இந்தியா வல்லரசாக உயர்ந்துள்ளது.
