
கொல்கொத்தா : பிரபல பாடகரான  கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கொத்தாவில் நடைபெற்ற ஒரு இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார். இவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் பிஜேபி தலைவர் ஒருவர் கூறியிருக்கும் கருத்து தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் கொல்கொத்தாவில் நடந்த இசைநிகழ்ச்சிக்கு பிறகு தனது ஹோட்டலுக்கு திரும்பிய பாடகர் கேகே நெஞ்சுவலி என தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சில மணிநேரங்களிலேயே இறந்துவிட்டார் என கூறப்பட்டது. அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சரியான முன்னேற்பாடுகள் இல்லை எனவும் குளிரூட்டும் சாதனத்தில் இருந்து அதிக புகை கிளம்பியதாகவும் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மேற்குவங்க பிஜேபி மாநில துணைத்தலைவர் திலீப் கோஷ் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது " பாடகர் கேகே இறந்ததை அறிந்து மிகவும் வேதனைக்குள்ளானேன். அவரின் மரணம் சந்தேகத்தை கிளப்பியுள்ளதாக பலர் கூறிவருகின்றனர். தெற்கு கொல்கொத்தாவில் அமைந்துள்ள இரண்டு கல்லூரிகளால் திங்கள் மற்றும் செவ்வாயில் பாடகரின் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.
ஆனால் இந்த இரு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்தது திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களே. அவர் உடல்நிலை கருதி வரவில்லை என கூறினாலும் திரிணாமூல் தலைவர்களே வற்புறுத்தி அழைத்துள்ளனர். அவர் அழுத்தத்தின் காரணமாகவே நிகழ்ச்சிகளில் பங்குகொண்டார். மேடையிலிருந்து அவர் இறங்கி நேராக ஹோட்டல் ரூமிற்கு சென்றுள்ளார்.
சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். மேலும் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டிஎம்சி யினரின் அழுத்தத்தாலாயே ஒரு உயிர் பிரிந்துவிட்டது. மேடையில் அவருக்கு வியர்த்துக்கொட்டியது. வெளியேற விரும்பினார்.
ஆனால் அவரை வெளியேற விடவில்லை. இது மரணம் அல்ல. இது ஒரு திட்டமிட்ட படுகொலை" என திலீப் கோஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திலீப்பின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மாநில திரிணமூல் செய்தித்தொடர்பாளர் குணால் கோஷ் "கோஷ் தனது அரசியல் இருப்பை காண்பிக்க இப்படி அவதூறான அறிக்கைகளை வெளியிடுகிறார். திலீப்பின் கருத்து முற்றிலும் முரணானது" என கூறியுள்ளார்.

 
                                             
                                             
                                            