குஜராத் : இந்த வருட இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஆம் ஆத்மீ, காங்கிரஸ் மற்றும் திரிணமூல் உள்ளிட்ட கட்சிகள் தங்களது பிரச்சார வியூகத்தை வகுக்க தொடங்கியுள்ளன. ஆம் ஆத்மீ இதர கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகையில் திரிணாமூல் கூட்டணிக்கு நோ சொல்லிவிட்டது. காங்கிரசின் நிலை எப்போதும்போல அந்தோ பரிதாபமே.
இந்நிலையில் குஜராத் மட்டுமன்றி இந்தியா முழுவதும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் காங்கிரஸுக்கு குட்பை சொல்லிவருகின்றனர். இதனிடையே காங்கிரசால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடப்பட்டு இரண்டே வருடங்களில் ஓரங்கட்டப்பட்ட ஹர்திக் படேல் நேற்று பிஜேபியில் இணைந்துள்ளார்.
பிஜேபி முன்னாள் முதல்வர் மற்றும் தற்போதைய உத்திரப்பிரதேச ஆளுநருமான ஆனந்தி பென் படேல் பதவி விலக முக்கிய காரணமாக இருந்தவர் இந்த ஹர்திக் படேல். 28 வயதான இந்த ஹர்திக் படிதார் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு 2015ல் பிஜேபிக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
முதலில் படிதார் சமூக மக்களுக்கு ஓபிசி அந்தஸ்து வழங்கவேண்டும் என கோரிக்கையெழுப்பி போராட்டத்தை ஆரம்பித்த ஹர்திக் பிறகு (EWS) பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு வேண்டும் என முழக்கமிட்ட ஆரம்பித்தார். கோட்டாவில் 2017ல் நடந்த போராட்டத்தில் 14 பேர் பலியாகினர்.
அதைத்தொடர்ந்து 2017ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெளிப்படையாக தனது ஆதரவு காங்கிரஸுக்கே என கூறினார். 2019 ல் மக்களவை தேர்தலுக்கு முன்னர் ஹர்திக்கை காங்கிரஸ் வாரியணைத்துக்கொண்டது. அதைத்தொடர்ந்து குஜராத் மாநில காங்கிரஸ் செயல்தலைவராக பதவி கொடுத்து அழகுபார்த்தது. ஆனால் மாநில காங்கிரசில் இருந்த நீயா நானா போட்டியில் ஹர்திக் ஓரங்கட்டப்பட அப்போது ஆரம்பித்த புகைச்சல் அவரை மே 18 அன்று ராஜினாமா செய்யவைத்தது.
இந்நிலையில் நேற்று பிஜேபியில் இணைந்த ஹர்திக் செய்தியாளர்களிடம் " தேச நலன் மாநில வளர்ச்சி பொதுநலன் சமூக நலன் என்ற நோக்கத்தை கொண்டு இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளேன். இந்திய தேசத்தின் வெற்றிகரமான பிரதமரான திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமைக்கு கீழ் தேசத்திற்கான மகத்தான சேவையில் நானும் ஒரு சிப்பாயாக பணிபுரிய போகிறேன்" என ஹர்திக் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரம் காங்கிரஸ் குஜராத்திகளின் எதிரி என்றும் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்றும் மக்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் தலைவர்களை வைத்து கட்சியை பலப்படுத்த முடியாது எனவும் காங்கிரசை கடுமையாக ஹர்திக் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.