குஜராத் : பிரதமர் மோடி தனிப்பட்ட பயணமாக நேற்று குஜராத் சென்றடைந்தார். அங்கு அவரது தாயாரை சந்தித்த பிறகு புகழ்பெற்ற புராதன கோவிலில் பாரம்பரிய கொடியை ஏற்றிய பிரதமர் பழங்கால கோவிலின் வரலாற்றை எடுத்துரைத்தார்.
குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் அமைந்துள்ளது பகவாத் மலை. இந்த மலையில் பலநூற்றாண்டுகால பழமையான மஹா காளி கோவில் அமைந்துள்ளது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சுல்தான் மஹ்மூத் பெத்தா எனும் முகலாய மன்னனால் இந்த கோவிலின் கோபுரம் சிதிலமாக்கப்பட்டது. அதன்பிறகு அந்த கோவிலின் பாரம்பரிய கொடி ஏற்றப்படவே இல்லை.
தற்போது அந்த கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த கோவிலின் பாரம்பரிய கொடியை நேற்று பாரதபிரதமர் மோடி ஏற்றினார். அந்த விழாவில் பேசிய பிரதமர் " ஐநூறு ஆண்டுகள் ஆகியும் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனபின்னரும் மஹா காளி கோவிலில் கொடியேற்றப்படவில்லை. இன்று அது ஏற்றப்படுகிறது.
கோவில்களில் ஏற்றப்படும் கொடி நமது ஆன்மீகத்தின் அடையாள சின்னம் மட்டும் அல்ல. பலநூற்றாண்டுகள் மாறியும் யுகங்கள் கடந்தும் நமது நம்பிக்கை நித்யமாகவே உள்ளது. பழங்காலத்தை போலவே இன்றும் கோவில் பொலிவுடன் நிற்கையில் லட்சக்கணக்கான பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டபப்டுவதை பார்த்திருப்பீர்கள். காசிவிஸ்வநாத் கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது. கேதார் நாத் கோவிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நம்பிக்கை மற்றும் ஆன்மீக மகிமையின் மையங்கள் ஒவ்வொன்றாக மீண்டும் நிறுவப்பட்டு வருகின்றன. சர்தாம் யாத்திரைக்கான உட்கட்டமைப்பை நாங்கள் உருவாக்கிய பிறகு லட்சக்கணக்கில் மக்கள் அங்கு செல்வதை பார்த்திருப்பீர்கள்.
ஆன்மீக மையங்களின் வளர்ச்சியுடன் மதசுற்றுலா வளர்ச்சிக்கான கட்டமைப்பை மேம்படுத்துவது மிகமுக்கியம். நாட்டின் சிறந்த ஆன்மீக சுற்றுலா தலத்தில் மிகமுக்கியமான இடத்தில் இந்த மஹா காளி கோவில் இருக்கும்" என அந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.