24 special

பக்திப்பாடல் ஒலிபரப்பியவருக்கு நேர்ந்த சோகம்..! போலீஸ் குவிப்பு !

Police
Police

குஜராத் : கடந்த சில நாட்களாக வழிபாட்டுத்தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் போலீசார் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் அகற்றிவருகிறது. இதுதொடர்பாக பொதுநல மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒலிபெருக்கிகளை அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அங்ககீகாரம் பெறவேண்டும் எனவும் மேலும் சில நெறிமுறைகளையும் விதித்துள்ளது.


இந்நிலையில் குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஒரு இல்லத்தில் அமைந்திருக்கும் கோவிலில் பக்திப்பாடல் ஒலிபரப்பியதற்காக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக நேற்று இரவு ஐந்துபேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மெஹ்சானா மாவட்டம் முதர்தா கிராமத்தில் உள்ள அஜித் தாக்குர் குடும்பத்தினர் தங்களது இல்லத்தில் அருள்மிகு மெல்டி தேவிக்கு சிறிய கோவில் ஒன்றை எழுப்பியுள்ளனர். மே 3 அன்று மாலையில் கோவிலில் தீபம் ஏற்றி பூஜை நடத்தியுள்ளனர் தாக்கூர் குடும்பத்தினர். மேலும் பக்திப்பாடல்களை ஸ்பீக்கர் மூலம் ஒலிபரப்பியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட சத்தத்தினால் கோபமடைந்த அண்டைவீட்டுக்காரரான சதாஜி என்பவர் தாக்கூர் வீட்டிற்கு வந்து ஸ்பீக்கரை அகற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.வாக்குவாதம் கைகலப்பில் முடியவே சதாஜி , ஜெயந்தி தாக்கூர் மற்றும் வினு தாக்கூர் மற்றும் கூட்டாளிகள் இரண்டு பேர் என ஐந்துபேர் சேர்ந்து அஜித் மற்றும் அவரது சகோதரர் ஜஸ்வந்த் இருவரையும் கம்பால் அடிக்க தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து அக்கமபக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மெஹ்சானா சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் பலனளிக்காமல் மேல்சிகிச்சைக்கு அஹமதாபாத் அரசுமருத்துவமனைக்கு சகோதரர்கள் இருவரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேல்சிகிச்சையில் பலனளிக்காமல் படுகாயமடைந்த ஜஸ்வந்த் பரிதாபமாக உயிரிழந்தார். அஜித் தாக்கூர் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு ஐந்துபேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்முறை பரவாமலிருக்க மெஹ்சானா மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.