24 special

இந்தியாவின் ஸ்டீல்த் ட்ரோன் சீனாவை கண்காணிக்கிறதா..?


கர்நாடகா : DRDO கடந்த ஜூலை 1 அன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியா தன்னிச்சையாக பறக்கும் தொழிநுட்ப டெமான்ஸ்டரேட்டரை கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவில் அமைந்துள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் வெற்றிகரமாக சோதித்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


மேலும் "முழுவதும் தன்னிச்சையாக இயங்கக்கூடிய இந்த ட்ரோன் புறப்படுதல், வழிப்பாதை வழி செலுத்தல் மற்றும் இலகுவான டச் டவுன் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. எதிர்காலத்தில் ஆளில்லவிமானங்களை உருவாக்குவதில் முக்கிய மைல்கல்லை இது அடைந்துள்ளது. மேலும் இனி முக்கியமான தொழில்நுட்பங்களுடன் விரைவில் உள்நாட்டிலேயே தயாராகும்.

இது தன்னிறைவுக்கான முதற்படியாகும். ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஸ்விப்ட் என அழைக்கப்படும் இந்த ரக ஆளில்லா விமானங்கள் வெளிநாட்டு சப்ளையர்களை நம்பியிருப்பதை குறைக்கும். மேலும் இந்த ட்ரோன்களில் உள்ள உபகரணங்கள் இந்தியாவிலேயே வாங்கப்பட்டது என்பது சிறப்பாகும்.

ட்ரோன்களில் உள்ள அண்டர் கேரேஜ், ஏர்ப்ரேம், ஏவியானிக்ஸ் மற்றும் விமானக்கட்டுப்பாட்டு அமைப்புகள் உட்பட பல உபகரணங்கள் இந்தியாவிலேயே வாங்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த ட்ரான் பரிமாணமும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் நீளம் 3.96 மீட்டர்.

இறக்கையுடன் சேர்த்து 4.8 மீட்டர் அகலம். இதன் எடை 1043 கிலோகிராம். மேலும் இந்த ட்ரோன் பயன்பாட்டிற்கான சிறிய விமான இயந்திரங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இன்னும் முழுமையடையவில்லை என கருதப்படுகிறது. ஆனாலும் ஜிடிஆர்இ தயாரித்துள்ள ஸ்மால் டர்போ எஞ்சின் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட கட்டக் ட்ரோனுக்கு சமமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த வகை ட்ரோன்கள் இமயமலை மற்றும் எல்லைக்கோட்டுப்பகுதியில் சீனதுருப்புகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பயன்படுத்தப்படும் என தெரிகிறது. மேலும் சீனா எல்லைப்பகுதிகளை ஒட்டி விமானதளங்களை அமைத்துவருவதால் இந்தியா சீனா மீது தனது கண்ணை வைத்துள்ளது. பாதுகாப்புப்படையில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இந்திய ஸ்டீல்த் ட்ரோன்தயாரிப்பு இதுவே முதல்முறையாகும்.