புதுதில்லி : நுபுர் ஷர்மாவின் கருத்துக்களை தொடர்ந்து வகுப்புவாதிகளால் பல இடங்களில் வன்முறை தூண்டப்பட்டது. நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக கருத்துக்கூறியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் அஸ்ஸாமில் அணையை உடைத்து வெள்ளசேதம் ஏற்படுத்தப்பட்டு சில மாவட்டங்கள் நீரில் மூழ்கியதோடு பலர் கொல்லப்பட்டனர்.
இந்த பரபரப்பான சூழலில் மௌலானா கூறிய கருத்துக்கள் அனைத்து தரப்பினரும் வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. ஜமியத் உலமா இ ஹிந்த் தலைவரான மௌலானா மஹ்மூத் மதனி கூறுகையில் " இதுபோன்ற பாதகமான எதிர்வினைகளை கொடுப்பவர்கள் நேர்மையற்றவர்கள். தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலைகள் இதுபோல தொடர்ந்தால் இழப்பு நாட்டிற்கே உண்டாகும்.
எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்க்கோ அல்லது சமூகத்திற்கோ இழப்பு அல்ல. இந்தியா உலகத்தின் விஸ்வகுருவாக முத்திரை பாதிக்கவேண்டும் என்பது அரசின் கனவாகும். இந்தியாவிற்கு அதற்கான தகுதி உள்ளது. ஆனால் அது தட்டிப்பறிக்கப்படுகிறது. நுபுர் ஷர்மா கூறிய கருத்துக்காக கொலை செய்வது மிக தவறான செயல்.
இஸ்லாத்தில் இதுபோன்ற எதிர்வினைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வெறுப்பை வெறுப்பால் எதிர்கொள்ளமுடியாது. நெருப்பு ஏற்பட்டால் அதை அணைக்க நீர்தான் தேவை. அன்பின் மூலம் எதையும் எதிர்கொள்ளவேண்டும்" என மதனி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஏற்கனவே நுபுர் ஷர்மா மீது பல இடங்களில் தொடுக்கப்பட்ட வழக்கை ஒரே வழக்காக்கி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் இதை சர்ச்சையாக்கி ஒருசிலர் குளிர்காய்வதுடன் அப்பாவி மக்களை மூளைச்சலவை செய்து குற்றச்செயல்களில் வன்முறையிலும் ஈடுபட தூண்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் வன்முறை தூண்டப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த தேசிய புலனாய்வு அமைப்பான NIA இரண்டு கொலை வழக்குகளின் பின்னணியையும் ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.