புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை கொடுத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-
புதிய தமிழகம் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பழனி எஸ்.விஜயகுமார் மற்றும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் க. சிவநாத பாண்டியன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தினுடைய அரசியல் வரலாற்றில் ஜனநாயக ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது இதுவே முதல் முறை. ’குண்டர் சட்டம்’ என்பது கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், கடத்தலில் ஈடுபடுவோர், மணல் கடத்தல் செய்வோர், போதை மருந்து கடத்துவோர், நில அபகரிப்பு செய்வோர் போன்ற சமூக விரோதிகளை எவ்வித விசாரணையுமின்றி ஒரு வருடத்திற்குச் சிறையில் அடைப்பதாகும்.
பழனி விஜயகுமாரும் சிவநாதன் பாண்டியனும் புதிய தமிழகம் கட்சி துவங்கப்பட்ட காலத்திலிருந்தே ஏறக்குறைய 30 வருடங்களுக்கு மேலாக விசுவாசமிக்கத் தொண்டர்களாகச் செயல்பட்டு வரக்கூடியவர்கள். கட்சியின் சார்பாக ஜனநாயக ரீதியாக அறிவிக்கப்பட்ட போராட்டங்களைத் தவிர, அவர்கள் எவ்விதமான சமூகவிரோத செயல்களிலும் எக்காலத்திலும் ஈடுபட்டவர்கள் அல்ல. அது போன்று எவ்விதமான வழக்குகளும் அவர்கள்மீது கிடையாது.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய 'மக்கள் சபை' நிகழ்ச்சியில் தமிழகத்திற்குத் தேவை தேசிய மாடலா? திராவிட மாடல் அரசா? என்ற தலைப்பின் கீழ் ’தேசிய மாடலின் சிறப்பு’ குறித்து நான் பேசிக்கொண்டிருந்தபொழுது, ஏற்கனவே திட்டமிட்டு வரவழைக்கப்பட்டிருந்த திமுக கலவரக் கும்பல் அந்த அரங்கிலேயே கலவரம் செய்தார்கள்; பேச விடாமல் தடுத்திட முயற்சி செய்தார்கள். திமுகவினரின் இந்த ஜனநாயக விரோத போக்கைக் கண்டிக்க கூடியவகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக அந்தந்த மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கடந்த 30 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக விஜயகுமார் மற்றும் சிவநாத பாண்டியன் ஆகியோரின் தலைமையில் 32 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக தமிழகத்தில் இது போன்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக் கூடியவர்களைக் கைது செய்து, அன்று மாலையே விடுதலை செய்து விடுவது தான் வழக்கம். ஆனால் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 32 பேரையும் அன்று மாலை விடுதலை செய்யாமல், தனித்தனியாகப் பிரித்து 10 பேர் திண்டுக்கல், மற்றொரு 10 பேர் தேனி, மீதம் 12 பேர் மதுரை என வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மே மாதம் 2 ஆம் தேதி (திங்கட் கிழமை) திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிணை விடுப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமாக மூன்றாவது நாளான புதன் கிழமையே விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் புதன்கிழமை விசாரிக்கப் படாமல் வியாழக்கிழமை விசாரித்து, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அவர்களுடைய பிணை விடுப்பை நிராகரித்து நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. சாதாரண மறியலுக்காக அவர்களைக் கைது செய்ய வேண்டிய அவசியமுமில்லை; இவ்வளவு நாட்கள் சிறையில் அடைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இன்றைய அரசு சட்டத்தை மட்டுமல்ல, நீதிமன்றத்தையும் வளைத்திருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு விஜயகுமார் மற்றும் சிவநாத பாண்டியன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான குண்டர் சட்ட உத்தரவுடன் காவல்துறையினர் மதுரை செல்வதாகத் தகவல்கள் வந்தன. மாவட்ட ஆட்சியர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. ஒரு சாதாரணமான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக ஒரு குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு இவர்கள் இருவரும் எப்படி உடந்தையானார்கள்?.
ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டங்கள் பெறுகின்றபொழுது, ’இந்திய அரசியல் சாசனத்தின்பால் நம்பிக்கை கொண்டு, எவ்விதமான பாகுபாடும் இல்லாமல் நடந்து கொள்வோம்’ என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்த தெய்வத்தின் மீதோ அல்லது மனசாட்சியின் அடிப்படையிலோ எடுத்துக்கொண்ட உறுதி மொழி அன்று என்ன ஆயிற்று? ஆட்சியாளர்கள் இன்று இருக்கலாம்; நாளை போகலாம். இது போன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் மன்றங்களிலும், நீதிமன்றங்களிலும் பதில் சொல்லக் கூடியவர்கள் அதிகாரிகள் தான் என்பதை அவர்கள் ஏன் உணராமல் போனார்கள்?.
தன்னை எதிர்த்து எவ்விதமான ஆர்ப்பாட்டமும் நடைபெறக் கூடாது என்று எண்ணுவதற்கு ஸ்டாலின் ஒன்றும் ’முடிசூடா மன்னனும்’ அல்ல, தனது மாவட்டத்தில் ஒரு சிறிய ஆர்ப்பாட்டமும் நடத்தக் கூடாது என்று எண்ணுவதற்கு ஐ.பெரியசாமி ஒன்றும் ’குறுநில மன்னரும்’ அல்ல. ஒருவேளை ஸ்டாலினும், பெரியசாமியும் அந்த எண்ணத்தோடு இருந்தாலும்கூட, மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். விசாகன்.இ.ஆ.ப, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. வி.ஆர்.சீனிவாசன், இ.கா.ப ஆகியோர் இந்த அப்பட்டமான ஜனநாயக விரோத செயலுக்குத் துணை போனது ஏன்?
அதிகாரிகள் ஆட்சியாளர்களின் PRIVATE ARMY அல்ல. இந்திய மக்கள் அனைவரையும் பாதுகாக்க இந்திய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதை திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகள் ஏன் உணர மறுத்தார்கள்? இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை, ஜனநாயகப் படுகொலையை நாம் சட்ட ரீதியாக அணுக உச்சநீதிமன்றம் வரை கொண்டு செல்வோம், மனித உரிமை ஆணையம் உட்பட அனைத்து விதமான ஜனநாயக அமைப்புகள் மற்றும் அனைத்து தளங்களிலும் முன்னெடுத்துச் செல்வோம் என்பதையும் காலம் உணரும்.
ஆளுங்கட்சிக்கு அதிகார போதை அதனால் அவர்கள் எதையும் கண் கொண்டு பார்க்கமாட்டார்கள்; காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். ஆனால் ஜனநாயக நெறிமுறைகளின்படி ஆட்சி அதிகாரம் நடக்க வேண்டும் என்று கருதுகிற ஆளுங்கட்சியினரின் கூட்டணியில் இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சிகள் கூட இந்த அநியாயத்தை நிச்சயமாக ஏற்க மாட்டார்கள். தமிழகத்தில் கொஞ்சநஞ்சம் மனசாட்சியோடு இருக்கக்கூடிய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இதை நிச்சயமாகத் தட்டிக் கேட்பார்கள் என்றே நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் ’டி - ஸ்டாக்கிஸ்ட் அரசு’ ஆட்சிக்கு வந்தவுடன் எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. எல்லோர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டதா?ஏன் ஸ்டாலினால் மட்டும் சும்மாவா ஆட்சிக்கு வர முடிந்தது? 2017 ஆம் ஆண்டிலிருந்து இவர்கள் நடத்திய போராட்டங்களுக்கும், அதில் பங்கு பெற்ற திமுக காரர்கள் மீதும், கூட்டணி கட்சியினர் மீதும் எத்தனை குண்டர் சட்டங்கள் போட்டு இருக்க வேண்டும்? ‘நீட் எதிர்ப்பு’ என்ற பெயரில் ஆர்ப்பாட்டம், கலவரம் என்று சட்டம் ஒழுங்கைச் சீர் குலைத்தார்கள்.
2020ஆம் ஆண்டு மார்ச் முதல் ஏறக்குறைய 2 ஆண்டுக் காலம் கரோனா ஊரடங்கு அமலிலிருந்த பொழுதே தடைகளை மீறி ஊர் ஊராகச் சென்று கிராம சபைக் கூட்டம் நடத்திய ஸ்டாலின் மீது வழக்குப் பதியப்பட்டதா? கைது செய்யப்பட்டாரா? சிறையிலடைக்கப்பட்டாரா? குண்டர் சட்டம் பாய்ந்ததா? 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோரைக் கூட்டி விடிய விடிய மெரினாவிலும், மதுரையிலும், கோவையிலும் அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றதே அவர்களெல்லாம் கைது செய்யப்பட்டனரா? குண்டர் சட்டம் பாய்ந்ததா?
இந்திய அரசியல் சாசனத்தின் பால் நியமிக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதற்காக மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் சென்றபொழுது எல்லா மாவட்டங்களிலும் திமுகவினரால் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டதே அவர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்ததா? ஆளுநர் மாளிகை நோக்கி கனிமொழி தலைமையின் கீழ் முற்றுகை போராட்டம் நடைபெற்றதே கனிமொழி மீது வழக்குப் பதியப்பட்டதா? கைது செய்யப்பட்டாரா? சிறையிலடைக்கப்பட்டாரா?
குண்டர் சட்டம் பாய்ந்ததா? கோவை தொண்டாமுத்தூரில் காவல்துறை அனுமதியை மீறி ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தைக் கூட்டினாரே அவர்மீது வழக்குப் பதியப்பட்டதா? கைது செய்யப்பட்டனரா? சிறையிலடைக்கப்பட்டனரா? குண்டர் சட்டம் பாய்ந்ததா? பாரத பிரதமர் மோடி அவர்கள் அரசு விழாவிற்காக தமிழகம் வந்தபோது விமானம் நிலையம் முழுவதும் கருப்பு கொடியும், ஹெலிக்காப்டரில் செல்லும்போது கூட கருப்பு நிறத்தைப் பார்க்க வேண்டும் என கருப்பு பலூன்களைப் பறக்க விட்டார்களே அவர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்ததா?
2021 சட்டமன்ற தேர்தல் நடக்கும் நாள்வரை கரோனா முழு முடக்க உத்தரவு அமலிலிருந்தது: கூட்டம் கூட்டக் கூடாது என உத்தரவு இருந்தது ஆனால் அதையும் மீறி தமிழகம் முழுவதும் ஸ்டாலினும் உதயநிதியும் சட்டவிரோதமாகக் கூட்டங்களைக் கூட்டினார்களே, அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டதா? கைது செய்யப்பட்டனரா? சிறையிலடைக்கப்பட்டனரா?
குண்டர் சட்டம் பாய்ந்ததா? கடந்த 15 தினங்களுக்கு முன்பு கூட மேதகு ஆளுநர் ரவி அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே, அவரின் வாகனங்கள்மீது கொடிக்கம்பங்கள் எறியப்பட்டதே அவர்கள் கைது செய்யப்பட்டனரா? குண்டர் சட்டம் பாய்ந்ததா?
நாம் சுட்டிக் காட்டக்கூடியவை எல்லாம் ஒன்று இரண்டு உதாரணங்கள் மட்டுமே. விரிவாக விவரிக்க நேரமும் போதாது; இடமும் போதாது. 2017 முதல் 2021 வரையிலும் இருந்த ஆட்சியாளர்களை மத்திய அரசின் அடிமைகள் என்று குற்றம் சுமத்தி 505 வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஆட்சிக்கு வந்தபின் ஒன்றைக் கூட உருப்படியாக நிறைவேற்றாதபோது, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாத ஸ்டாலின் மற்றும் அந்த அரசின் மீது இயற்கையாகவே மக்களின் கோபம் கொந்தளிக்கிறது.
அவர்களால் அந்த எதார்த்தத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை, ஜனநாயகம், சமத்துவம் பற்றி திமுகவினர் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஒரு ஊடகத்தில் ஒரு விவாதம் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு தரப்பினர் தங்களுடைய வாதத்தை முன் வைக்கின்றபொழுது எதிர் தரப்பினர் அதற்குக் கருத்து ரீதியாக பதில் சொல்ல வேண்டுமே தவிர, எடுபிடி கோஷ்டிகளை வைத்துக் கூட்டத்தில் கலவரம் செய்வதோ, கைகலப்புக்குத் தயாராவதோ ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல.
’கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்று தன்னுடைய கட்சியின் கொள்கையாகப் பிதற்றிக் கொள்ளக் கூடியவர்கள் பொதுவெளியில் ஏன் அப்படி கட்டுப்பாடு இல்லாமல் நடந்துகொண்டார்கள்?
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகர் அரங்கில் கலவரம் செய்ய முற்பட்ட திமுகவினரைக் கண்டிக்கவும், ஸ்டாலின் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் செய்திருந்தால் அது ஒரு நாணயமான தலைமை என்று கருதலாம். ஆனால் ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்குக் கூட அனுமதிக்காமல் கலவரம் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட கட்சியின் தொண்டர்கள் தன்னிச்சையாக ஜனநாயக ரீதியான போராட்டத்தை நடத்தினால் அதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள்மீது வழக்குப் போடுவதும், சிறையில் அடைப்பதும்.
அதன் முன்னணி செயல் வீரர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதும் ஏதோ தன்னிச்சையாக இரண்டு அதிகாரிகள் மட்டும் செய்ததாக யாராலும் கருத இயலாது. ஸ்டாலினும் பெரியசாமியும் என்றாவது ஒருநாள் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். புதிய தமிழகம் கட்சி நெருப்பிலே பூத்த மலர்; போராட்டத்திலே உதித்து போராட்டத்திலேயே வளர்ந்து போராட்டத்திலேயே மலர்ந்து இருக்கக்கூடிய கட்சி. எந்தப் பொய்யைச் சொன்னாலும், எத்தனை அவமானப்படுத்தினாலும் அதை ஏற்றுக் கொண்டு அண்டி வாழ்வதற்கு புதிய தமிழகம் ஒன்றும் பூனைக் கூட்டம் அல்ல.
21 ஆம் நூற்றாண்டில் தென் தமிழக மக்கள் சுதந்திரத்தோடும், சுயமரியாதையோடும் வாழ்கிறார்கள் என்றால், வடக்கு மாவட்ட ’ஆதிதிராவிடர்கள்’ குடிசைகளில் தீ வைத்துக் கொளுத்தப் படாமல் பாதுகாக்கப்படுகிறது என்றால், விளிம்புநிலை பெண்மணிகளுடைய தன்மானம் பாதுகாக்கப்படுகிறது என்றால், இளைஞர்கள் தங்களுடைய சொந்த கிராமத்திற்கு சுதந்திரமாக வந்து போக முடிகிறது என்றால், அந்தச் சூழ்நிலைகள் உருவாவதற்குத் தேவேந்திர குல வேளாளர் மக்களும், புதிய தமிழகம் கட்சியும் செய்த அளப்பரிய தியாகங்களுக்குக் கிடைத்த பலன்களே தவிர, திராவிடத்தால் வந்ததல்ல.
தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களுக்காக மட்டுமல்ல, தங்களோடு இடம்பெற்ற பட்டியலிலிருந்தவர்களுக்காவும், தமிழ் மக்கள் அனைவருக்காகவும் போராடியிருக்கிறார்கள். வழக்குகள், கைது, சிறைச்சாலை, குண்டாந்தடி, துப்பாக்கிச்சூடு, வஞ்சகம், துரோகம், ஏமாற்று வேலை, அரசியல் பித்தலாட்டம் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு தான் இன்றும் ’புதிய தமிழகம் கட்சி’ உயிர்ப்போடு இருக்கிறது.
1750 காலகட்டத்தில் சுந்தரலிங்கம் தொடங்கி, 1950-களில் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு, 1957இல் தியாகி இமானுவேல் தேவேந்திரனார், அதன் தொடர்ச்சியாக துறையூர் பிலிப்ஸ், தாமிரபரணியில் 17 பேர் போன்ற எண்ணற்றோரின் உயிர்த் தியாகங்களால் தான் இந்த இயக்கம் இன்றும் உயர்ந்து நிற்கிறது.
இந்த மண்ணின் மூத்த குடிமக்கள், தமிழ் மக்களான நாங்கள் இங்கு வீழ்த்தப்பட்டதும் வஞ்சிக்கப்பட்டதும் ’திராவிடம் என்ற மாயை’யால் தான். எனவே, குண்டர் சட்டத்தைக் காட்டி ’தேவேந்திர குல வேளாளர் மக்களை அச்சுறுத்தி விடலாம், புதிய தமிழகம் கட்சியை ஒடுக்கி விடலாம்’ என்றால் அது பகல் கனவாகவே முடியும். கக்கத்திலே கத்தியை வைத்துக்கொண்டு காந்தியம் பேசுவதைப் போல உள்ளத்திலே ஆணவத்தையும் சர்வாதிகாரப் போக்கையும் வைத்துக்கொண்டு ’ஸ்டாலின்’ பேசக்கூடிய போலி சமூகநீதியை தமிழ் மக்கள் அறியாமல் இல்லை. இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகவும்;
பேச்சுரிமை, கருத்துரிமை எழுத்துரிமை நிலைநாட்டுவதற்காகவும் எங்களுடைய முன்னோர்கள் சிறை சென்றிருக்கிறார்கள்; உயிரிழந்திருக்கிறார்கள்; தியாகம் செய்திருக்கிறார்கள். டி-ஸ்டாக்கிஸ்டுகளின் முன்னோர்களைப் போல ஆங்கிலேயர்களுக்கு வால் பிடித்து, அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை.
இந்தச் சுதந்திர நாட்டின் எவ்விதமான உரிமையையும் அனுபவிப்பதற்கு டி-ஸ்டாக்கிஸ்டுகள் உரிமையற்றவர்கள்; தகுதியற்றவர்கள்! சுதந்திரத்தையே கருப்பு தினமாகக் கொண்டாடியவர்கள்; சுதந்திரத்தை நிராகரித்தவர்கள்; எங்களை நீங்களே ஆளுங்கள் என்று ஆங்கிலேயரிடத்தில் தொடர்ந்து மனு போட்டவர்கள் எப்படி சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்களாக மட்டும் தகுதியுடையவர்களாவீர்கள்?
இந்த மண் எங்களுடைய மண், பாரதத்தாயின் மண், இந்திய மண். திராவிடம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியத் தேசத்திற்கே அன்னியமானது. திராவிடத்தை இந்த தேசத்திலிருந்து அப்புறப்படுத்தும் வரை எங்களது பணி தொடரும். ஆட்சி- அதிகாரத்திற்கு புறவாசல் வழியாக வந்தவர்களுக்கு எங்களுக்கான உரிமையைப் பறிக்க அதிகாரமில்லை.
சட்டத்திற்குப் புறம்பாக, ஜனநாயகத்திற்கு விரோதமாக, மனித நேயத்திற்கு எதிராக ஒரே ஒரு ஆர்ப்பாட்டத்தில் பத்து நிமிடம் பங்கு பெற்றதற்காக ’தேவேந்திரகுல வேளாளர் சிங்கங்கள் - புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள்’ விஜயகுமார் மற்றும் சிவநாத பாண்டியன் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
தேர்தல் வந்தால் ஆசை வார்த்தைகளைக் காட்டி, தேவேந்திரகுல வேளாளர்களின் ஒட்டுமொத்த ஓட்டுக்களை அபகரித்துக் கொள்வது; தேர்தல் முடிந்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் அம்மக்களை ஒடுக்குவதுதானே கடந்த எல்லா கால கட்டங்களிலும் திமுக ஆட்சியில் நடந்தேறியுள்ளது. இனியும் தேவேந்திரகுல வேளாளர்கள் ஏமாறமாட்டார்கள்.
புதிய தமிழகம் கட்சியினர் மீது போடப்பட்டு இருக்கக்கூடிய குண்டர் சட்டத்தை ரத்துச் செய்ய வலியுறுத்தி இன்று முதல் ’தேவேந்திரகுல வேளாளர்கள்’ வாழக்கூடிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் முதற்கட்டமாக கருப்புக்கொடி ஏற்றித் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தவும், இந்த ஜனநாயக விரோத ’ஸ்டாலின் ஸ்டாக்கிஸ்ட்’ அரசைக் கண்டித்தும், முகநூல், வாட்ஸ்-அப், டிவிட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்யவும், அனைத்து புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளையும், தேவேந்திர குல வேளாளர் மக்களையும், தேசத்தின்பால் பற்று கொண்ட அனைத்து தமிழ் மக்களையும், ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து சமூக வலைதள செயல்பாட்டாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 30 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற புதிய தமிழகம் கட்சியினர் 32 பேரையும் நிபந்தனையின்றி விடுதலையும், நிர்வாகிகள் விஜயகுமார் - சிவநாத பாண்டியன் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யும் வரையும் நமது போராட்டங்கள் தொடரும்.!
குண்டர்கள் யார்? பிறருக்கு உழைத்துக் கொடுப்பவர்களா? பிறர் உழைப்பில் வாழ்பவர்களா? தேவேந்திரகுல வேளாளர்கள் உழைத்து வாழக்கூடியவர்கள், பிறர் உழைப்பில் வாழக்கூடியவர்கள் அல்ல. ஊரார் சொத்தைக் கொள்ளையடித்து கொழுத்த குண்டர் கூட்டமே, நீங்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை!
ஜனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஒரு கொடுங்குற்றமா?புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் விஜயக்குமார் – சிவநாத பாண்டியன் மீது குண்டர் சட்டம்.!கண்டன குரல்கள் ஓங்கட்டும்.! பத்தாயிரம் கிராமங்களில் கருப்புக் கொடி – போராட்டம் பரவட்டும்.!
விடியா அரசை, வீடியோ அரசை வீட்டுக்கு அனுப்புவோம்.! தமிழக மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவோம்.. என்று குறிப்பிட்டுள்ளார்.