மஹாராஷ்டிரா : பணமோசடியில் ஈடுபட்டு அமலாக்கத்துறையால் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் அமைச்சர் நவாப் மாலிக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். என்.சி.பி எம்.எல்.ஏக்கள் இருவரையும் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுத்திருப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இரு பிரதிநிதிகளின் உரிமையை மிதிப்பது போன்றது என சிவசேனா புலம்பிவருகிறது.
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் " சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவரை சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுத்திருப்பது பிஜேபியின் அரசியல் பழிவாங்கல் உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. ஜூன் தொடக்கத்தில் மஹாரஷ்டிராவில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது.
அதில் வாக்களிக்க இரண்டு பிஜேபி எம்.எல்.ஏ.க்கள் ஆம்புலன்சில் வரவழைக்கப்பட்டனர். இது சுயநலமான பாரபட்ச அரசியல்" என குறிப்பிட்டுள்ளது. ஆனால் சிவசேனா மறந்து போன ஒன்று என்னவெனில் அனுமதிமறுக்கப்பட்ட இருவரும் பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள் என்பதும் பிஜேபியால் அழைத்துவரப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பதையும் தான் என பிஜேபியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவுகள் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க கோரி சிறையில் உள்ள இரண்டு அமைச்சர்களும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணிகள் தலா இரண்டு வேட்பாளர்களையும் பிஜேபி ஐந்து வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 10 அன்று ஆறு இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் சிவசேனாவின் இரண்டாவது வேட்பாளர் பிஜேபியிடம் தோல்வியடைந்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.