பெங்களூர் : நேற்று பெங்களூர் கொம்மகட்டா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றினார். அவர் சில சீர்திருத்தங்கள் தற்காலிகமாக வேண்டுமானால் விரும்பத்தகாததாக இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் அதன் நன்மைகள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்களை நாடு அனுபவிக்கும் என கூறினார்.
பிரதமர் மோடி மேலும் கூறுகையில் " இந்த 21ம் நூற்றாண்டு இந்தியா செல்வம் மற்றும் வேலைகளை உருவாக்குபவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு சொந்தமானது. அவர்களே இந்தியாவின் பலமாக இருக்கின்றனர். அவர்களுக்கு மத்திய அரசு கடந்த எட்டாண்டுகளாக பதவி உயர்வு அளித்துவருகிறது. எந்த ஒரு விஷயத்திலும் தொடக்கமும் புதுமையும் அதற்கான பாதைகளும் எளிதானது அல்ல.
அதேபோல கடந்த எட்டாண்டுகளாக நாட்டை இந்த பாதையில் கொண்டுசென்றதும் எளிதான விஷயம் இல்லை. பல முடிவுகள் தற்காலிகமாக வேண்டுமானால் விரும்பும் வகையில் இல்லாததாக இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் அதனால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பலன்களை நாடு அனுபவிக்கும். சீர்திருத்த பாதைகள் மட்டுமே நம்மை புதிய இலக்குகளை நோக்கி அழைத்துச்செல்லும்.
புதிய தீர்மானங்களால் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையை திறந்துவிட்டோம். அரசு வசதிகளை அளித்து வாழ்கையை மேம்படுத்த உதவினால் என்ன சாதிக்கலாம் என்பதை பெங்களுர் உலகுக்கு காட்டியுள்ளது. பெங்களூர் இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் கனவு நகரம்.
இதன்காரணமே புதுமை மற்றும் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் சரியான பயன்பாடுகள் தான். இரட்டை இயந்திர அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்று நிறைவேறிவருவதை நீங்கள் காணலாம். இன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் வணிகம் செய்யவும் எளிமையாக வாழவும் உறுதுணையாக இருக்கிறது. நான் நேரத்தை வீணடிக்க விரும்பமாட்டேன். ஒவ்வொரு நொடியும் வேலைசெய்வேன்'" என அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.