உத்திரபிரதேசம் : அலஹாபாத் நீதிமன்ற ஆணைக்கிணங்க வழிபாட்டுத்தலங்களில் அமைக்கப்பட்டுள்ள கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை மாநில போலீசார் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். கடந்த 78 மணிநேரத்தில் 6000தீர்க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை அகற்றியிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய சட்டம் ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த்குமார் "மத வழிபாட்டுத்தலங்கள் இருந்து அங்கீகரிக்கப்படாத ஒலிபெருக்கிகளை அகற்றவும் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிர்மாணிக்கவும் மாநிலம் தழுவிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை வரை 6031 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு 29,674 ஒலிபெருக்கிகள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது.
பாரபட்சமின்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதுவரை அகற்றப்பட்ட ஒலிபெருக்கிகள் அங்கீகரிக்கப்படாதவை. மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதிபெறாமல் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் அனுமதிக்கப்படாத அல்லது அனுமதிபெறாத ஒலிபெருக்கிகள் என வகைப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.
கடந்தவாரம் சட்டம் ஒழுங்கு தொடர்பான அதிகாரிகள் கூட்டத்தில் பேசியிருந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் " மக்களின் மதநம்பிக்கைப்படி செயல்பட அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது. அவர்களின் நம்பிக்கைப்படி நடைமுறைகளை பின்பற்றுங்கள். மைக்ரோபோன்களை பயன்படுத்தமுடியும் என்றாலும் எந்த வழிபாட்டுத்தல வளாகத்திலிருந்தும் அதிக ஒலி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். எந்தவொரு பிரச்சினையையும் மக்கள் நேரிடக்கூடாது" என கூறியுள்ளார்.
மேலும் காவல்துறை அளித்த தகவலின் அடிப்படையில் வாரணாசி பகுதியில் 1366 ஒலிபெருக்கிகள், மீரட் 1215, மற்றும் பரேலி 1070, கான்பூர் 1056 ஒலிபெருக்கிகள் 78 மணிநேரத்தில் அகற்றப்பட்டுள்ளன. ஒலிபெருக்கிகளை அகற்றும்பணி கடந்த செவ்வாய்கிழமை முதல் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. மதத்தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் சோமன் பர்மா தெரிவித்துள்ளார்.