கேரளா : கேரள காங்கிரஸ் முன்னாள் கொறடா கோட்டயம் பகுதியில் பேசிய பேச்சுக்கள் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளனர்.
கேரள காங்கிரஸ் முன்னாள் கொறடாவாக இருந்தவர் பிசி ஜார்ஜ். இவர் 33 ஆண்டுகளாக பூஞ்சார் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் காங்கிரசில் இருந்து விலகி கேரள ஜனபஷம் என்ற கட்சியை தொடங்கினார். 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கோட்டையான பூஞ்சாரில் கம்யூனிஸ்டுகளிடம் படுதோல்வியடைந்தார்.
பிசி ஜார்ஜ் அனந்தபுரி ஹிந்து மஹா சம்மேளனத்தின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் " ஆண்மைக்குறைவை அதிகரிக்கும் சொட்டுமருந்துகள் கலந்த தேநீர் இஸ்லாமியர்கள் நடத்தும் தேநீர்கடைகளில் விற்கப்பட்டு மக்கள் மலடாக்கப்படுகிறார்கள். அவர்கள் எச்சில் துப்பி தருவதை நாம் ஏன் உண்ணவேண்டும்.
அவர்கள் எச்சில் துப்புவது புனிதம் என அவர்களின் அறிஞர்கள் கருதுகிறார்கள். அவர்கள் எச்சில் துப்பியபிறகே உணவை பரிமாறுகிறார்கள்.இஸ்லாமியர்கள் இல்லாத பகுதிகளில் தொழில் தொடங்குகிறார்கள். இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள். ஹிந்துக்களும் கிறித்தவர்களும் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். நான் எந்த திருமணத்தில் கலந்துகொண்டாலும் மணமக்களிடம் இதையே கூறுகிறேன்.
என்.ஆர்.ஐ தொழிலதிபர் யூசுப் அலி ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதியிலேயே மால்களை திறக்கிறார். ஹிந்து மக்களிடமிருந்து பணத்தை பெறவே இதைச்செய்கிறார்" என பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் கோட்டை போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளனர். மேலும் இவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் விடி சதீசன் "ஜார்ஜ் இனவாத உணர்வுகளை தூண்டி சமூகத்தில் ஆழமான பிளவுகளை உருவாக்கும் நோக்கத்துடன் பேசியுள்ளார். அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார். காங்கிரசும் மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளது.