
மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா இன்று உலக அரசியல், பொருளாதார மேடையில் ஒரு சாதாரண நாடாக அல்ல; உலக சக்திகளின் கட்டாயத் தேர்வாக மாறியுள்ளது. ஒருகாலத்தில் “உதவி கேட்கும் நாடு” என பார்க்கப்பட்ட இந்தியா, இன்று “கூட்டாளியாக வேண்டிய நாடு” என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஓராண்டில் உலகின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து இந்தியாவை நாடி வருவதற்கான அடிப்படை காரணம்.
ஐரோப்பிய யூனியன் தலைவர்கள், பிரிட்டன் பிரதமர், ரஷ்ய அதிபர் புதின், அடுத்ததாக பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் – இந்த வரிசை வெறும் மரியாதை பயணங்கள் அல்ல. இவை அனைத்தும் இந்தியா உலக அதிகார மையமாக மாறிவருகிறது என்பதற்கான அரசியல் அறிகுறிகள். அந்த வரிசையில் இன்று ஜெர்மன் தலைவர் இந்தியா வந்திருப்பது, சாதாரண தூதரக சந்திப்பாக அல்ல; உலக அரசியல் சமன்பாடுகளை மாற்றும் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக திகழும் ஜெர்மனி, இன்று இந்தியாவுடன் பொருளாதார ரீதியாக சமநிலைக்கு வந்துள்ளது. வளர்ச்சி வேகத்தை எடுத்துக் கொண்டால், இந்தியா விரைவில் ஜெர்மனியையும் முந்தும் என்ற கணிப்புகள் சர்வதேச பொருளாதார வட்டாரங்களில் வெளிப்படையாக பேசப்படுகின்றன. எந்திரவியல், உலோகவியல், தொழில்துறை பொறியியல், கப்பல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஜெர்மனி இன்றும் உலகின் ஆசானாக விளங்குகிறது. “ஜெர்மன் இன்ஜினியரிங்” என்ற பெயரே தரத்திற்கான முத்திரை.
ஆனால் வரலாறு ஒன்றை தெளிவாக சொல்கிறது. 19-ஆம் நூற்றாண்டிலேயே அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளாதாரம் என அனைத்திலும் வல்லரசாக மாறும் திறன் ஜெர்மனியிடம் இருந்தது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி இன்னொரு பெரிய இழப்பை சந்தித்தது. அவர்களிடம் இருந்த உச்ச தர விஞ்ஞானிகளை அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களிடம் அழைத்து சென்று, அதன் மூலம் வான்பலம், ராக்கெட் தொழில்நுட்பம், விண்வெளி சக்தி ஆகியவற்றில் முன்னேறின. ஜெர்மனி மட்டும் கட்டுப்படுத்தப்பட்டு அடக்கி வைக்கப்பட்டது. இதன் விளைவாக, ஜெர்மனிக்கு எல்லா பலமும் இருந்தாலும் வான்பலம் மட்டும் இல்லாத நாடாக நீண்ட காலம் இருந்தது.
தற்போது உள்ள சூழலில் தனக்கென பாதுகாப்பான, நம்பகமான கூட்டாளியை தேட வேண்டிய கட்டாயத்தில் ஜெர்மனி உள்ளது. அதே வலி ரஷ்யாவுக்கும் உள்ளது. இந்த சூழ்நிலையில், ஜெர்மனுக்கு சரியான நண்பனாக இந்தியா தெளிவாகத் தெரிகிறது.
இந்தியாவும் ஜெர்மனியும் இன்று எந்திரவியல் மட்டுமல்ல; வான்வெளி, செயற்கைக்கோள், விண்வெளி தொழில்நுட்பம், பாதுகாப்பு உற்பத்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன. இதுவே “மேக் இன் இந்தியா” திட்டத்தின் உண்மையான ஆழம். ஜெர்மனி இந்தியாவில் உற்பத்தி செய்ய வருவது வெறும் தொழில் முதலீடு அல்ல; அது எதிர்கால பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப கூட்டணிக்கான அடித்தளம்.
இந்த சூழ்நிலையில்தான், மோடி போன்ற உலக அளவில் மதிக்கப்படும் தலைவர், ஜெர்மன் தலைவர் உடன் சேர்ந்து பட்டம் பறக்கவிட்டு அதை உலகுக்கே படமாக வெளியிடுவது நடைபெறுகிறது. இது வேடிக்கை செய்தி அல்ல. இது விளம்பரமும் அல்ல. இது உதயநிதி நாய்குட்டியோடு சுற்றுவது போன்ற அரசியல் காட்சியோ, ஸ்டாலின் கம்பு சுற்றுவது போன்ற உள்ளூர் பிம்ப அரசியலோ கிடையாது. இது உள்ளார்ந்த ராஜதந்திரம். உலகுக்கு ஒரு செய்தியை சொல்லும் அரசியல் சைகை.
உலகின் மூன்றாம் நிலை பொருளாதார சக்திகளாக இருக்கும் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்தால், முதல் இடத்தில் இருக்கும் நாட்டிற்கே பொருளாதார சவால் விட முடியும். இது கணக்கு. இது அரசியல். இது எதிர்காலம்.அதைத்தான் இரு தலைவர்களும் பட்டம் விட்டு சொல்கிறார்கள். அதை அரசியல் மொழியில் அல்ல; சின்ன சின்ன சைகைகளில், படங்களில், உலகம் கவனிக்கும் தருணங்களில் வெளிப்படுத்துகிறார்கள்.
