24 special

இதற்கும் மேலாக சீனா போன்ற நாடுகளில் கடன் வாங்கிய இலங்கை தேவையற்ற விமான நிலையங்களையும், துறைமுகங்களையும், சாலைகளையும் அமைத்தது. மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரில் சீனக் கடனுதவியுடன் கட்டிய விமான நிலையத்திற்கு ஒற்றை விமானம் கூடச் செல்வதில்லை. ஹம்பந்தோட்டா துறைமுகத்தை தொடர்ந்து படிக்க கிளிக் !

Srilanka
Srilanka

இலங்கையின் தற்காலிக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்திருக்கிறார். அவரின் சொந்தவீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கிறது. போராட்டக்காரர்களின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி கோத்தபய வரும் 13-ஆம் தேதி ராஜினாமா செய்யவுள்ளதாகத் தெரிகிறது. போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து குத்தாட்டம் போடுகிற வீடியோக்கள் வெளிவருகின்றன. ராஜபக்ச சகோதரர்கள் அனேகமாக நாட்டினை விட்டுத் தப்பியோடியிருக்க வாய்ப்பிருக்கிறது. 


இந்த மாதிரி நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்ததுதான். கோத்தபய போராட்டக்காரர்களுக்கு எதிராக போலிசையும், ராணுவத்தையும் களமிறக்குவார், இலங்கை இன்னொரு ரத்தக்களறிக்குள் சிக்கிக் கொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோத்தபய அப்படிச் செய்யக்கூடியவர்தான் என்றாலும் என்ன காரணத்தாலோ அதனைச் செய்யவில்லை அல்லது செய்ய இயலவில்லை. இலங்கை ராணுவம் அவர் பேச்சைக் கேட்க மறுத்திருக்கலாம். அந்தவகையில் நல்லதுதான்.

இனி இலங்கையின் அத்தனை அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டணி ஆட்சியமைக்கக்கூடும். ஆனால் அந்தக் கூட்டணி ஆட்சியால் செய்ய முடிவது என்ன என்பதும் கேள்விக்குறிதான். எது எப்படி இருந்தாலும் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை உடனடியாகத் தீர்வதற்கான வாய்ப்புகளே இல்லை என்பதுதான் கண்முன்னே தொக்கி நிற்கும் செய்தி.

 இலங்கையின் அன்னியச் செலாவணி முழுவதும் கரைந்துபோய்விட்டது. வெளிநாடுகளிலிருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்ய இனி இயலாது. இலங்கைப் பாராளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்னர் தனது நாடு "திவாலாகிவிட்டதாக" வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

 இப்படி திவாலான நாடுகளுக்கு உலகவங்கி போன்ற நிறுவனங்கள் கடன் வழங்குவது மிகவும் கடினம். அப்படியே வழங்கினாலும் அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். வரி விகிதங்களை உயர்த்தவும், மானியங்களையும் இன்னபிற செலவீனங்களைக் குறைக்கவும் உலகவங்கி உத்தரவிடும். செய்துதானாக வேண்டும். வேறு வழியேயில்லை.

தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் "தாராளமான" நாடாக இருந்தது இலங்கைதான். பொதுவில் எல்லாவிதமான சலுகைகளை மக்களுக்கு அள்ளி வழங்கி அவர்களை இலவசத்திற்கு அடிமைகளாக்கி வைத்திருந்தததொரு நாடு இலங்கை. தனியார் முதலீடுகள் அதிகமில்லை. பல்வேறுபட்ட தொழில்கள், தொழிற்சாலைகள் இல்லை. இலங்கையின் பெரும்பாலான மக்கள் அரசாங்க உத்தியோகஸ்தர்கள்தான். ஏகப்பட்ட அரசு ஊழியர்கள்.

அதேசமயம் இலங்கையர்கள், இந்தியர்களை ஒப்பிடுகையில், தரமான கல்வி பயின்றார்கள். அதேசமயம் இந்தியர்களைப் போல ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள் அதிகமில்லை. பெரும்பாலும் சிங்களம் அல்லது தமிழில்தான் கல்வி கற்றார்கள். ஓரளவிற்கு வசதியானவர்கள், வாய்ப்புக் கிடைத்தவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஆங்கிலக்கல்வியும் அளித்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.

 எனவே இலங்கையர்களால் இந்தியர்களைப் போல வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகம் கிட்டவில்லை. உலகமெங்கும் பரவி வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் அகதிகளாகப் பிற நாடுகளுக்குப் பிழைக்கக் சென்றார்கள்.

உலகில் எங்குமே ஒரு புகழ்பெற்ற இலங்கை மருத்துவரையோ அல்லது பிற துறைகளில் வேலை செய்கிறவர்களையோ நாம் காண இயலாது. அகதித் தமிழர்களை இதில் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள். அதிகபட்சம் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்கிற வறிய தமிழ், சிங்களப் பெண்களைப் பார்க்க இயலும். அதற்குமேல் இலங்கையர்களைக் காண நீங்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேட வேண்டும். குறிப்பாக சிங்களவர்களை.

இலங்கை ஓரளவிற்கு வளம் மிகுந்த நாடு. இயற்கை வளத்திற்குக் குறைவில்லை. அதன் வருமானத்தில் பெரும்பகுதி சுற்றுலாப் பயணிகளாலும், தேயிலை ஏற்றுமதியாலும் வருகிறது. அந்த வருமானத்தைக் கொண்டே இலங்கை இத்தனை காலம் பிழைத்துக் கிடந்தது. இதே நிலைமை தொடர்ந்திருந்தால் இலங்கை இன்றைக்கும் தட்டுத்தடுமாறி பிழைத்துக் கிடந்திருக்கும்.

ஆனால் கோவிட் அதில் மண்ணை அள்ளிப் போட்டது. வருடத்திற்கு $5 பில்லியன் டாலர்கள் சுற்றுலாப் பயணிகளின் மூலமாக சம்பாதித்த இலங்கையில் கடந்த வருடம் வெறும் $100 மில்லியன் மட்டுமே வந்து சேர, இலங்கைப் பொருளாதாரம் சரிவுண்டது.

ஏற்கனவே சொன்னபடி, இலங்கை தன்னுடைய நாட்டிற்குத் தேவையான எதனையும் தங்களுடைய நாட்டிலேயே உற்பத்தி செய்வதில்லை. எல்லாமே வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதியாக வேண்டும்.

அப்படி இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க டாலர்களைக் கொடுத்தாக வேண்டும். உதாரணத்திற்கு இலங்கை ஒவ்வொரு வருடமும் $300 மில்லியன் டாலர்கள் பால்பவுடர் இறக்குமதிக்காக மட்டுமே செலவிடுகிறது என்று பார்க்கையில் பிற பொருட்களுக்கு எவ்வளவு பணம் செலவாகிறது என்று நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். அமெரிக்க டாலர்கள் கையிருப்பு தீர்ந்தபின்னர் இலங்கையினால் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய இயலவில்லை.

பெட்ரோல் உட்பட. இதற்கும் மேலாக சீனா போன்ற நாடுகளில் கடன் வாங்கிய இலங்கை தேவையற்ற விமான நிலையங்களையும், துறைமுகங்களையும், சாலைகளையும் அமைத்தது. மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரில் சீனக் கடனுதவியுடன் கட்டிய விமான நிலையத்திற்கு ஒற்றை விமானம் கூடச் செல்வதில்லை.

ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா வாங்கிய கடனுக்குப் பதிலாக விழுங்கிவிட்டது. பெரும் பொருட்செலவில் கட்டப்பட்ட சாலைகளில் போக்குவரத்தில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது. தேவையற்ற இந்தக் கடன்களுக்கு வருடாவருடம் வட்டி கட்டியாக வேண்டும். இப்படிப் பல பேரிடிகள் இலங்கையைத் தாக்கின.

இது கோத்தபயவின் தவறில்லை என்றாலும் விதி அவரை இந்த இக்கட்டான நிலையில் ஜனாதிபதியாக்கி விளையாடிவிட்டது. இதன் காரணமாக இன்றைக்கு ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பமும் தலைமறைவாகிவிட்டது. அவர்கள் மீண்டும் இலங்கை திரும்பி வாழ்வது சாத்தியமில்லாத ஒன்று.

ரணில் போன்ற அனுபவஸ்தர்கள் இலங்கையை இந்த இக்கட்டிலிருந்து மீட்கும் திறமை பெற்றவர்கள்தான் என்றாலும் இதனைச் சரிசெய்ய நீண்ட காலம் பிடிக்கும். பட்டினியால் வாடும் இலங்கையனுக்கு அத்தனைகாலம் காத்திருக்கும் பொறுமையில்லை. எனவே ரணிலையும் தூக்கியெறிந்துவிட்டான்.

இனி அமையப்போகும் கூட்டணி ஆட்சியினாலும் எத்தனை பிரயோஜனம் இருக்கும் எனத் தெரியவில்லை. கூட்டணி என்றாலேயே குழப்படிதான். அதனையும் தாண்டி அவர்கள் இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டால் நல்லதுதான்.

1990-களில் இந்தியா ஏறக்குறைய இதே நிலைமையில் இருந்ததனை எத்தனைபேர் நினைவில் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஆண்டவன் பி.வி. நரசிம்மராவ் என்கிற திறமையான பிரதமரை அனுப்பி வைத்தான். வெறும் ஒரு வாரத்திற்குத் தேவையான அன்னியச் செலாவணி மட்டுமே இந்திய அரசாங்கத்திடம் இருந்த் இக்கட்டான நிலைமையை மிக அற்புதமாகச் சமாளித்தார் பி.வி. நரசிம்மராவ். 

இன்றைய இலங்கைக்குத் தேவை இன்னொரு பி.வி. நரசிம்மராவ்தான். கூட்டணிக் குழப்படிகளல்ல.அதற்கும் மேலாக இனியேனும் இலங்கை தனது இறக்குமதிப் பொருளாதாரத்தை மறுபரிசீலனை செய்து தங்களுக்குத் தேவையானவற்றைத் தங்கள் நாட்டில்யே உற்பத்தி செய்யவும், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கவும் முன்வரவேண்டும். அதுவே இலங்கையின் நீண்டகால பொருளாதாரத் தேவைகளுக்குச் சரியானது.இலங்கை இந்த இக்கட்டிலிருந்து விரைவில் மீண்டு வருவதாக.

நரேந்திரன் பிஎஸ்.