உக்ரைன் : ரஷ்யா உக்ரைன் மோதலை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட ரஷ்ய நட்புநாடுகளிடம் மத்தியஸ்தம் செய்யக்கோரி உக்ரைன் தரப்பு நாடியிருந்தது. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் இந்த விவகாரத்தில் நடுநிலை கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. உக்ரைன் அதிபர் தொலைபேசி வாயிலாக இந்த விவகாரம் குறித்து பேசவும் அழைப்பு விடுத்திருந்தார்.
அமெரிக்க சார்பு நாடான உக்ரைனின் நடவடிக்கை ராஜாங்க ரீதியாக பல நாடுகளுக்கு எரிச்சலூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ஜனாதிபதி இணையதளத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் சில நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி விளாதிமிர் ஜெலின்ஸ்கி ஜெர்மனுக்கான கெய்வ் தூதர், ஹங்கேரி, இந்தியா, செக் குடியரசு, நார்வே உள்ளிட்டா உக்ரைனின் தூதர்களை பதவி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். எதற்க்காக இந்த பதவிநீக்கம் என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பதவிநீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து ஜெலன்ஸ்கி சர்வதேச ஆதரவு மற்றும் ராணுவ உதவியை கேட்குமாறு தூதர்களுக்கு வலியுறுத்தியிருந்தார். அது நடைபெறாமல் போனதும் சர்வதேச கவன ஈர்ப்பு கிடைக்காமல் போனதும் இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் ரஷ்யா ஜெர்மனின் எரிவாயு நிறுவனங்களின் தொடர்புகள் ஜெலின்ஸ்கியை எரிச்சலூட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையில் பதவியிழந்த தூதர்களுக்கு அரசாங்கத்தில் வேறு பதவிகள் வழங்கப்படுமா என்பது குறித்து எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ரஷ்யா உக்ரைன் மோதலின் தொடக்கத்தின்போது பல நாடுகள் உக்ரைன் பின்னால் நின்றன. ஆனால் நாளடைவில் சர்வதேச சமூகம் உக்ரைனை ஒதுக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.