24 special

வக்கிரமான மனநிலை..! மக்கள்தொகை குறித்து சர்ச்சையை கிளப்பிய மத்திய அமைச்சர்..!

giriraj singh
giriraj singh

பிஹார் : உலக மக்கள்தொகை தினத்தையொட்டி பிஜேபி தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதிகாசத்தில் வரும் பெண் அரக்கியான சூர்சா என்பவளை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே மக்கள்தொகையில் சீனாவை வரும் 2023க்குள் இந்தியா மிஞ்சிவிடும் என நேற்று ஐநா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டரில் மத்திய அமைச்சர் கிரிராஜ் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் கடந்த முப்பது ஆண்டுகளாக வேகமான பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா சீனாவிடம் தோற்றது. ஆனால் மக்கள் தொகை விகிதத்தில் அண்டை நாடுகளை விட முன்னேறியுள்ளது. எங்களிடம் குறைந்த வளங்களே உள்ளது.

எங்கள் மக்கள்தொகை சூர்சாவின் வாயை போல விரிவடைந்துகொண்டே இருக்கிறது. ஒரு நபர் பத்து குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் வக்கிர மனநிலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்கள்தொகையை கட்டுப்படுத்த மிக கடுமையான சட்டம் தேவை. நாடு முழுவதும் உள்ள அனைத்து மத மக்களுக்கும் இது பொருந்தும். 

அத்தகைய சட்டத்திற்கான கோரிக்கைகள் பாராளுமன்றம் முதல் கடைக்கோடி தெருக்கள் வரை கோஷமாக எழுப்பப்பட வேண்டும்" என உணர்ச்சிபொங்க அந்த வீடியோவில் மத்திய அமைச்சர் பேசியுள்ளார். மேலும் பிஹார் மாநிலம் பெகுசராய்  மக்களவை தொகுதி எம்பியாக கிரிராஜ் சிங் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த விவகாரத்தில் பிஜேபி கூட்டணியான ஆர்ஜேடி மாற்றுக்கருத்தை கொண்டுள்ளது.

முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில் பெண்களின் கல்வியறிவு பெருகும்போது கருவுறுதல் விகிதங்கள் சரிகின்றன என தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களின் மக்கள்தொகை பெருக்கத்தை மனதில் வைத்தே பிஜேபி அடிக்கடி இதை பேசிவருகிறது எனவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பிஜேபி செயல்பட்டு வருகிறது என்றும் விமர்சித்து வருகின்றன. 

ஆனால் "மக்கள் தொகை பெருக்கத்தால் வேலைவாய்ப்பின்மை பெருகும். அது குறிப்பிட்ட மதத்தை மட்டுமல்ல அனைத்து தரப்பினரையுமே சரிவில் தள்ளும் என்ற பொது ஞானம் இல்லாமல் எதிர்க்கட்சிகள் பேசிவருகின்றன. மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களை  போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவருகின்றன" என பிஜேபியினர் பதிலடி கொடுக்கின்றனர்.