24 special

ஜனாதிபதி தேர்தல்..! தெறித்து ஓடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள்..?


புதுதில்லி : இந்திய குடியரசுத்தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 18 அன்று அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என எதிர்க்கட்சிகள் குழம்பிபோயுள்ள நிலையில் ஆளும் பிஜேபி தனது சார்பாக நிறுத்தப்போகும் வேட்பாளர் பற்றி மௌனம் காத்து வருகிறது.


தேசியவாத காங்கிரஸ் தலைவரான மஹாரஷ்டிராவை சேர்ந்த சரத் பவாரை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக நிறுத்த அவரை அணுகின. மேலும் மமதா பேனர்ஜி நேரடியாக டெல்லி சென்று பவாரை சந்தித்திருந்தார். ஆனால் அதற்கடுத்த நாளே சரத்பவார் தரப்பு வெளியிட்ட அறிக்கை எதிர்கட்சியினரை நிலைகுலைய செய்தது. அவர் தனது அறிக்கையில்,

" முதலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும். அதன்பிறகே தேர்தலில் போட்டியிடுவது பற்றி தலைவர் பவார் முடிவெடுப்பார்.  பவார் ஜனாதிபதியாவது ஒவ்வொரு மராத்தியனுக்கும் பெருமை" என அந்த அறிக்கையில் குழப்பும் விதமான கருத்துக்களை கூறி பவார் ஒதுங்கிக்கொண்டார். அதையடுத்து வேட்பாளராக நிறுத்த பரூக் அப்துல்லாவை அணுகியுள்ளனர்.

முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை மமதா தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிந்தன. அதை பரூக் அப்துல்லா மறுத்து எதிர்க்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் " மமதா பானர்ஜி அவர்களால் இந்திய குடியரசுத்தலைவர் பதவிக்கு எனது பெயர் முன்மொழியப்பட்டதை அறிந்தேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அவர் முன்மொழிந்த பின்னர் பல எதிர்கட்சித்தலைவர்களிடம் இருந்து அழைப்புக்கள் வந்தன. என்னை வேட்புமனு தாக்கல் செய்ய சொல்லி கோரிக்கை எழுப்பினர்.

நாட்டின் உயரிய பதவிக்காக நான் முன்மொழியப்பட்டதை எண்ணி சிலாகிக்கிறேன். மக்களின் மனதில் ஆழமாக இடம்பிடித்துள்ளேன். ஆனால் ஜம்மு காஷ்மீர் ஒரு முக்கியமான தருணத்தை கடந்து கொண்டிருக்கிறது. இந்த நிச்சயமற்ற காலகட்டத்தை கடக்க எனது முயற்சிகள் தேவை. அதனால் பரிசீலனையில் இருந்து எனது பெயரை திரும்ப பெறவேண்டும்" என அந்த அறிக்கையில் முன்னாள் முதல்வர் பரூக் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்கட்சிகளால் முன்மொழியப்பட்ட இரண்டாவது வேட்பாளரும் ஜகா வாங்கியது எதிர்கட்சியினரிடையே பலத்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது ஒரு மிகப்பெரிய பின்னடைவு எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.