
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவிடம் தோற்ற பிறகு பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதனால், பொருளாதார, முக்கிய ஆதரவை வழங்கும் நாடுகளை நோக்கி அது அதிகளவில் திரும்புகிறது இதற்கிடையே, இந்தியாவின் நெருங்கிய நண்பர்களில் ஒன்றான சவுதி அரேபியா, சமீபத்தில் பாகிஸ்தானுடன் ஒரு முக்கிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதற்கிடையில் பாகிஸ்தான் சமீபத்தில் செய்த ஒரு வான்தாக்குதல், அந்த நாட்டை பெரிய சிக்கலில் தள்ளியுள்ளது. தீவிரவாத முகாம்களை அழிக்கிறோம் என்று அறிவித்து போர் விமானங்களை அனுப்பிய பாகிஸ்தான், உண்மையில் தங்கள் சொந்த கிராமத்தைத் தான் தாக்கி விட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ஏன் இந்த தாக்குதலை நடத்தியது என்றால், தற்போது அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. வெளிநாடுகளிடமிருந்து கடன், உதவி கிடைக்காவிட்டால் அரசு இயங்க முடியாத நிலை. குறிப்பாக சவுதி அரேபியா, கத்தார் போன்ற அரபு நாடுகளிடமிருந்து பணம் பெற வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கம். அதற்காக, “நாமும் வல்லமை வாய்ந்த ராணுவ சக்தி” என்று காட்ட முயன்றார்கள். இந்தியா 2019-இல் பாலகோட்டில், இஸ்ரேல் காசா பகுதியில் செய்த அதிரடி தாக்குதலைப் போலவே, பாகிஸ்தானும் தீவிரவாத முகாம்களை இரவில் தாக்குகிறோம் என்ற நாடகத்தை நடத்த நினைத்தது.
அதன்படி சீனாவில் தயாரிக்கப்பட்ட JF-17 போர் விமானங்கள், செயற்கைகோள் வழிகாட்டும் குண்டுகளுடன் கிளம்பின. ஆனால் குறி தவறி அருகிலிருந்த கிராமமே தாக்கப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பலர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளுக்கு எதுவும் ஆகவில்லை. ஆரம்பத்தில் “மாபெரும் வெற்றி” என்று அறிவித்த பாகிஸ்தான் அரசு, உண்மை வெளிச்சத்துக்கு வந்ததும் முழுமையாக சிக்கலில் சிக்கியது.
இந்தியாவை அச்சுறுத்துவதே பாகிஸ்தானின் நோக்கம். “இப்போது இந்தியா அலறி விடும்” என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்தியா அமைதியாக இருந்தது. சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகளும், “சொந்த நாட்டிலேயே குறி தவறி மக்களை அழிக்கும் படையை நாங்கள் எப்படி நம்புவது?” என்று கேள்வி எழுப்பின. பாகிஸ்தான் எதிர்பார்த்த பாராட்டும், உதவியும் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் உள்நாட்டில் மக்கள் கடும் கோபமடைந்தனர். “தீவிரவாதிகளை அழிப்போம் என்று சொல்லி நம்மையே அழித்துவிட்டார்கள்” என்று குற்றம்சாட்டினர். இந்த நிலையில் ராணுவத் தளபதி முனீர், பிரதமர் ஆகியோர் பொதுமக்கள் முன் வராமல் இருந்தது மக்களின் நம்பிக்கையை மேலும் சிதைத்தது.
இதற்கிடையில் பாகிஸ்தான் சீனாவையே குற்றம் சாட்டியது. “விமானமும், குண்டுகளும் சீனாவின் தயாரிப்பு; அதனால்தான் குறி தவறியது” என்று கூறியது. ஆனால் சீனா எந்தப் பதிலும் சொல்லவில்லை. பாகிஸ்தானிடம் இருந்து கடனுக்கான வட்டியைப் பெறவே சீனா கவனம் செலுத்துகிறது. பாகிஸ்தானின் பிரச்சினையில் ஈடுபட விரும்பவில்லை.
இப்போதைய நிலையைப் பார்த்தால், பாகிஸ்தான் உலகுக்கு காட்ட நினைத்த “சூப்பர் ஹீரோ” முகம் முற்றிலும் உடைந்து விட்டது. சொந்த மக்களைத் தான் கொன்று விட்ட நாடு, வெளிநாட்டு நண்பர்களிடம் நம்பிக்கை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் இந்த தவறான வான்தாக்குதல் பாகிஸ்தானுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.