24 special

ட்ரைனில் பிரபல "நாளிதழ்" இருப்பதை பார்த்து கதறிய சுபவீ...!

Subavee
Subavee

பிரபல நாளிதழ் தினமலர் ட்ரைனில் இருப்பதை பார்த்து அதிர்ந்து போய் தனது கருத்தை தெரிவித்துள்ளார் சுப.வீரபாண்டியன் இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :-


சென்னையிலிருந்து கோவைக்குச் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்குப் புறப்படுகிறது. அந்தத் தொடர் வண்டியில் பயணிகள் வருவதற்கு முன்பே எல்லோருடைய இருக்கைகளிலும் தினமலர் நாளேடு இருப்பதைப் பார்க்க முடிந்தது. 

எல்லோரும் கட்டாயம் தினமலர் படித்துத்தான் ஆக வேண்டுமா என்ன? அவரவர் விருப்பப்படி என்ன நாளேடு  வேண்டும் என்று கேட்டுக் கொடுக்கலாம். அல்லது பல நாளேடுகளையும் தொடர்வண்டியில் ஒரு பகுதியில் வைத்து விட்டு,  வேண்டியதை அவரவர் எடுத்துக் கொள்ள வழி செய்யலாம். 

எந்த விருப்பத்திற்கும் இடமில்லாமல் எல்லோரிடமும் தினமலரைக் கொண்டு வந்து திணிப்பது என்ன நியாயம்? யாருடைய பணத்தில் தினமலர் வாங்கப்படுகிறது? நம் பயணச் சீட்டுக்கு நாம் கொடுக்கும் பணத்தில்தான் வாங்கப்படுகிறது என்றால், அது நம் உரிமையை மதிக்காத செயல். இல்லை, இல்லை அவர்கள் இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்றால், இலவசமாகக் கொடுக்கப்படும் எல்லா இதழ்களையும் மக்களுக்கு தொடர்வண்டித் துறை வாங்கிக் கொடுக்குமா? 

முரசொலி, விடுதலை, தீக்கதிர் போன்ற நாளேடுகளை நாமும் வாங்கிக் கொடுக்கலாம். சிறுவயதிலிருந்தே நான் முரசொலியும் விடுதலையும் படித்து வளர்ந்தவன். இன்றைக்கும் அன்றாடம் அந்த ஏடுகளைப் படிக்கிறேன். 

எனினும் அவற்றை மக்களிடம் கொடுத்தால் அவை கட்சிப் பத்திரிகைகள் என்று கருதுகின்றனர். தினமலர் மட்டுமென்ன நடுநிலை நாளேடா? அப்படி ஒரு வேடம்| பாசாங்கு! 

இப்போது எனக்கு ஒரு கருத்து தோன்றுகிறது. முரசொலி போன்ற ஏடுகள் கட்சி ஏடுகள்தாம். எனவே அவற்றை விட்டுவிடலாம்.

தினகரன் நாளேடு தினமலர் மாதிரியே நடுநிலை நாளேடு என்று வைத்துக் கொள்ளலாம். தொடர் வண்டித் துறை தினமலரை மக்களுக்கு வாங்கிக் கொடுக்குமானால், ஏன் தமிழக அரசு தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் அனைத்திலும் தினகரனை இலவசமாக வாங்கிக் கொடுக்க கூடாது? 

அரசு மட்டுமில்லை நாமும் கூட நம் வீட்டிற்கு அருகில் உள்ள படிப்பகம் முடி திருத்தகம் போன்றவைகளில் தினகரன் ஏட்டினை வாங்கிக் கொடுக்க வேண்டும். இப்படி எல்லாம் நான் எழுதுவது, தினகரன் ஏட்டின் விற்பனையைப் பெருக்குவதற்காக இல்லை. 

தினகரன் நாளேட்டின் ஆசிரியர் குழு யார் என்று கூட எனக்குத் தெரியாது.  ஆனால் முரசொலி, விடுதலையை போல தினகரனைக் கட்சிப் பத்திரிகை என்று சொல்லிவிட முடியாது. பொதுவான செய்திகளும் அதில் நிறைய இருக்கின்றன. மக்கள் அதையும் நடுநிலை ஏடு என்றுதான் கருதுவார்கள். 

இன்றைய சூழலில் நமக்குப் பொதுவான பல ஊடகங்கள் தேவைப்படுகின்றன. பொதுவான என்றால் நடுநிலை போலப் பாசாங்கு செய்யும் தினமலர் நாளேடு, சாணக்கியா வலையொளி போன்றவைகள் எல்லாம் நடுநிலை ஊடகங்களாகத்தானே தம்மைக் காட்டிக் கொள்கின்றன. அப்படிக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை கட்டாயம் நமக்கும் இருக்கிறது. 

எனவே நம் தோழர்கள் இதனை ஒரு வேலையாக எடுத்துச் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன். மாற்று வழிகளைச் சிந்திக்க வேண்டிய தருணத்திலும் கட்டாயத்திலும் இப்போது நாம் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார் சுபவீ. ஏற்கனவே தமிழக நூலகங்களில் தினகரனை வாங்கி பெருக்கி விட்டார்கள் என்பது சுபவீக்கு தெரியாதா?