பாஜகவில் இணைந்த ஊராட்சி மன்ற தலைவியை மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்ட நிலையில், அதற்கு இடைக்கால தடை விதித்து மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் ஊராட்சி தலைவிக்கு ஆதரவாக 6 வார்டு உறுப்பினர்கள் ஆஜர் ஆனதும் வழக்கில் அதிரடி திருப்பதை உண்டாக்கி இருக்கிறது,திண்டுக்கல் மாவட்டம் பழனி புஷ்பத்துார் ஊராட்சித் தலைவியை பதவி நீக்கம் செய்த உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
அவருக்கு ஆதரவான வார்டு உறுப்பினர்கள் 6 பேர் நீதிபதி முன்னிலையில் நேரில் ஆஜராகினர். புஷ்பத்துார் ஊராட்சி தலைவி செல்வராணி தாக்கல் செய்த மனுவில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புஷ்பத்துார் ஊராட்சித் தலைவியாக தேர்வு செய்யப்பட்டேன். பா.ஜ.க.வில் இணைந்தேன்.
இதனால் ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து பல்வேறு இடையூறுகள் வந்தன. அமைச்சர் சங்கர பாணியும் தொடர் நெருக்கடி கொடுத்தார் ஊராட்சியில் சில முறைகேடுகள் நடந்ததாக திண்டுக்கல் கலெக்டர் எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். முறைகேடு எதுவும் நடக்கவில்லை என உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளித்தேன்.
அது ஏற்புடையதாக இல்லை எனக்கூறி என்னை பதவி நீக்கம் செய்ய ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் கருத்துக்களை அறிய ஜூன் 23 ல் பழநி தாசில்தார் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சியின் 12 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். என்னை பதவி நீக்கம் செய்ய 7 உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததாகவும், தலைவர் மற்றும் 5 உறுப்பினர்கள் நிராகரித்ததாகவும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.
பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதாகக்கூறி என்னை பதவி நீக்கம் செய்து கலெக்டர் அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டார். எனது விளக்கத்தை கலெக்டர் முறையாக பரிசீலிக்கவில்லை. அவசரகதியில் ஜூன் 26 ஞாயிறு விடுமுறை நாளில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு செல்வராணி குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரருக்கு ஆதரவான வார்டு உறுப்பினர்கள் 6 பேர் ஆஜராகினர். நீதிபதி: மனுதாரரை பதவி நீக்கம் செய்த உத்தரவிற்கு ஜூலை 19 வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அரசுத் தரப்பில் ஜூலை 18 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக பாஜக மீது ஆளும் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது, இருப்பினும் பாஜகவினர் தொடர்ச்சியாக சட்ட போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்று வருவது, பாஜகவை நம்பி செல்லும் மக்கள் இடையே மேலும் நம்பிக்கையை அதிகரித்து உள்ளது.