ஆளுநர் பல்கலைக்கழங்களில் அரசியல் பேசுவதாக கூறி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக திமுகவினர் விமர்சனத்தை முன்வைத்தனர் இந்தசூழலில் தான் அப்படி என்னதான் ஆளுநர் மாணவர்கள் இடையே பேசுகிறார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ஆளுநர் உரை குறித்து சமூக வலைத்தளங்களில் ஆளுநர் உரையை பார்த்த ஒருவர் பதிந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது, அது பின்வருமாறு : மாண்புமிகு அமைச்சர் பொன்முடி அவர்கள், பட்டமளிப்பு விழா மேடையை, ஆளுநர், அரசியல் மேடை ஆக்கிவிடுவாரோ என்று அஞ்சுவதாகத் தெரிவித்திருந்தார்.
தொலைக்காட்சி விவாதத்தில், திரு. கான்ஸ்டண்டெய்ன் என்கிற திமுக அன்பர், பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பேசக்கூடாது என்று வழிகாட்டுதலில் சொல்லப்பட்டிருக்கிறது என்றார். அரசாங்கம் வெளியிட்டிருக்கும் அந்த Guidelines (சட்டம் அல்ல, வழிகாட்டுதல்) எந்த சீக்வன்ஸில் நிகழ்ச்சி போகும் என்பதைச் சொல்கிறது. அதில் கல்லூரி முதல்வர் உரையும், பிரதம விருந்தினர் உரையும் இருக்கின்றன. ஆகவே கவர்னர் பேசக்கூடாது என்று அர்த்தம் செய்துகொண்டு விட்டார் திரு. கான்ஸ்டண்டெய்ன். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
கவர்னர் என்ன அரசியல் பேசுகிறார் என்று அவரது (மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா) உரையை முழுவதும் கேட்டேன்.காமராஜில் ஆரம்பித்தார். அவருக்கு சுதந்திரப் போராட்ட வெறியைத் தூண்டியது ஜாலியன் வாலாபாக் படுகொலை என்பதைச் சொன்னார். (இது ரொம்ப முக்கியம். தேசத்தின் வேறொரு பகுதியில் வேறு மக்களுக்கு உண்டாகும் துன்பம் நம்மைப் பாதிக்க வேண்டும். அதுதான் தேசிய உணர்வு). வ. வு. சிதம்பரம் பிள்ளையைச் சொன்னார்.
தென்னாட்டுக்காரன் சுதந்திரப் போராட்டத்தில் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆரியன், திராவிடன் என்று இங்கிலீஷ்காரன் பிரித்தாட்கொண்டதைச் சொன்னார். ஆரியமும் திராவிடமும் பூகோள ரீதியான பாகுபாடுகள். அவற்றை இன ரீதியான பாகுபாடாகப் பிரச்சாரம் செய்து வரலாற்றை மாற்றியது இங்கிலீஷ்காரன் என்பதைச் சொன்னார்.
எண்ட்டர்ப்ரனராக ஆக விரும்பும் மாணவர்களுக்கு என்ன வழிகாட்டுதல்கள் திறன் மேம்பாடு, கடனுதவி மாதிரி தேவைப்பட்டாலும் தனக்கு இ-மெயில் அனுப்பும்படி சொன்னார் (இப்படிச் சொல்லும் முதல் கவர்னர் அல்லது முதல்வர் இவர்தான்)
Winner’s Profile என்ன என்பதைச் சொன்னார். வாழ்க்கை என்பது தொடர் வெற்றிகளின் தொகுப்பு அல்ல என்கிற உண்மையைச் சொன்னார். தோல்விகளை எப்படிக் கையாள வேண்டும் என்று சொன்னார். ஹ்ம்ம் பட்டம் பெறும் 1000 பேரில் நானும் ஒருவன் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தில், தெருவில், கிராமத்தில் தனிப்பட்ட அடையாளம் கொண்டவர்கள் என்று சொன்னார்.
என்னுடைய எஸ். எஸ். எல். சி தமிழ்ப் பாடத்தில் அரசியல் தலைவர் ஒருவரின் பட்டமளிப்பு விழாப் பேருரை பாடமாக வந்திருந்தது. அது எப்படிப்பட்ட மொக்கை உரை என்பது இப்போது புரிகிறது.
ஆளுநர் பேசியதில் எதுவும் அரசியல் இல்லை. திராவிடர் பற்றிச் சொன்னது அரசியல் அல்ல, வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை. அதில் யாருக்காவது கோபம் வருமானால் அது ஆளுநர் தவறு அல்ல.
ஆளுநர் மேதகு ஆர். என். ரவி அவர்களின் பட்டமளிப்பு விழா உரையைப் பாடமாக வைக்கலாம். வரப்போகும் தலைமுறை சிறந்ததாய் இருக்கும் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆளுநரை தொடர்ந்து உசுப்பேத்தி அவர் பேசுவதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியை திமுகவினரே செய்து வருவதாக அக்கட்சியினர் பலரும் இப்போது புலம்பி வருவது குறிப்பிடத்தக்கது.