
இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வந்து சென்றிருக்கிறார் பிரதமர் மோடி. சோழப் பேரரசர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பங்கேற்று, சிறப்பு நாணயத்தை வெளியிட்டிருக்கிறார். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த அந்த விழாவில், “ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் பாரதத்தின் அடையாளங்களாகத் திகழ்ந்தவர்கள். அவர்களுக்கு, தமிழகத்தில் சிலை வைப்போம்” என கூறியுளளார். சோழப் பேரரசர்களின் பெருமைகள் குறித்துப் பிரதமர் மோடி பேசியிருப்பது தென் மாவட்டங்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது இது ஆளும் தரப்புக்கு ஷாக்கை கொடுத்துள்ளது.
இதில் திமுக கூட்டணிக்குள் ஒரு முக்கிய பிரச்னை எழுந்துள்ளது பிரதமருக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது தி.மு.க. ‘பிரதமரின் வருகை, தமிழகத்துக்குக் கிடைத்த பெருமை’ என்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. ஒருபக்கம், ‘கீழடி ஆய்வறிக்கையை ஏன் வெளியிடவில்லை?’ என வீராவேசம் காட்டிக்கொண்டு, மறுபக்கம் ‘பிரதமரைப்போல உண்டா...’ எனத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடு கிறார்கள். முரண்பாடுகளின் மொத்த உருவமாகிவிட்டது தி.மு.க” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பிரதமரின் இரண்டு நாள் தமிழகப் பயணத்தில், முதல் நிகழ்வு என்றால் அது தூத்துக்குடிதான். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தைத் திறந்துவைக்கவும், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் ஜூலை 26-ம் தேதி இரவு தூத்துக்குடிக்கு வந்தார் பிரதமர் மோடி. மாலத்தீவிலிருந்து அவர் கிளம்புவதற்கு முன்பாகவே, அவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துவிட்டது தி.மு.க. கடந்த ஜூலை 25-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ராஜேந்திர சோழனின் கடல் கடந்த படையெடுப்பின் ஆயிரமாவது ஆண்டைக் குறிக்கக்கூடிய விழாவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்துக்கு வரவிருக்கிறார்கள்.
அதை தமிழகத்துக்குக் கிடைக்கக்கூடிய பெருமையாகப் பார்க்கிறேன்” என்று முதல் சலாமை அழுத்தமாகப் போட்டார். அமைச்சரின் இந்தப் புகழாரம், கூட்டணிக்குள் பட்டாசைக் கொளுத்திவிட்டது. டேமேஜ் கன்ட்ரோல் செய்வதற்காக, பிரதமர் வருகைக்குச் சில மணி நேரத்துக்கு முன்பாக, கீழடித் தொன்மையை வெளிப்படுத்தும் ஒரு வீடியோவை வெளியிட்டது தி.மு.க. ‘வணக்கம். நான் கீழடியில் வாழ்ந்த தமிழன் பேசுகிறேன்...’ என்றெல்லாம் உருட்டிப் பார்த்தார்கள். ஆனாலும், கூட்டணிக் கட்சிகளிடம் ஏற்பட்ட தகிப்பு அடங்கவில்லை.
“எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சி ஆனவுடன் ஒரு நிலைப்பாடு என தி.மு.க தலைகீழாக மாறுவதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. 2021-ல் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாக, பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் #GOBACKMODI என்ற ஹேஷ்டேக்கை தொடர்ச்சியாக டிரெண்ட் செய்தது தி.மு.க.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம், தி.மு.க தலைமைத் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்புமே வருவதில்லை. அந்தக் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளும் அமைதியாக்கப்படுகிறார்கள். எதிர்ப்பு காட்டும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும்கூட, முன்னெச்சரிக்கையாகக் கைதுசெய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்படுகிறார்கள். எதிர்ப்பு காட்டாவிட்டாலும் பரவாயில்லை. அநியாயத்துக்கு சலாம் போடாமலாவது இருக்கலாமே.என குமுற தள்ளுகிறக்கிறார்கள். கூட்டணி கட்சியினர்
திருச்சியில் பிரதமர் ரோடு ஷோ நடத்தியபோது, கிட்டத்தட்ட எட்டு கி.மீட்டருக்கு பொதுமக்களை நிறுத்தி வைத்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க., அ.தி.மு.க செய்தபோது மறைமுகமாக ஆதரவளித்தது, அங்கிருக்கும் சீனியர் தி.மு.க நிர்வாகிதான். ‘கோ பேக் மோடி’ என்று முழங்கியவர்கள், ‘மோடிக்குப் பின்னால் போவோம்’ எனத் தற்போது ரூட்டை மாற்றிவிட்டதுபோலத் தெரிகிறது. பிரதமரின் விசிட்டால், தி.மு.க கூட்டணிக்குள் களேபரங்கள் வெடிக்க தொடங்கி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் ஒருவிதச் சலசலப்பை உருவாக்கிவிட்டது, பிரதமர் மோடியின் ‘அரசியல்’ விசிட். பலத்த சத்தங்களையும் சந்தேகங்களையும்கூட உருவாக்கியிருக்கிறது. இந்தச் சலசலப்புகள், தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் வீரியமாகலாம் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.