திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் இப்பொழுது திமுக அரசுக்கு வினையாக அமைந்துவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளது, பல வாக்குறுதிகள் எங்கே என திமுக அரசு குறித்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும் ஆசிரியர்களுக்காக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் தான் இன்று திமுகவிற்கு பெரும் வினையாக மாறிவிட்டது. சம வேலைக்கு சம ஊதியம், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை, பணி நியமனத்துக்கு பிறகு மீண்டும் போட்டி தேர்வு கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றி தருகிறோம் என தேர்தல் சமயத்தின் போது ஆசிரியர்களுக்கு திமுக வாக்குறுதி கொடுத்ததை தற்பொழுது ஆசிரியர் எங்கே என கேட்க ஆரம்பித்து போராட்டத்தில் குதித்தது திமுக அரசை ஆட்டம் காண வைத்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் 4-வது நாளாக ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பழைய டி.பி.ஐ வளாகத்தில் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் அலுவலகம், தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம் என பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை. பணி நியமனத்துக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக் கூடாது. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம்", ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது குடும்பத்தினரோடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் கடந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்", என இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறினார்.மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேசிய பொழுது திமுக அரசு சொன்னதை நம்பித்தான் நாங்கள் ஆதரவு கொடுத்தோம் ஆனால் தற்பொழுது ஆட்சிக்கு வந்து எங்களை ஏமாற்றும் விதமாக இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. இப்பொழுது நாங்கள் இது பற்றி கேட்டால் அமைச்சரும் பேசுவதில்லை முதல்வர் ஸ்டாலினும் வாய் திறப்பதில்லை கேட்டால் நிதி நிலையை காரணம் காட்டுகிறார்கள் என்ற கோபத்துடன் கூறினார்கள்.
டி.பி.ஐ. வளாகம் போராட்டக்களமாக மாறியுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பலர் மயங்கி விழுந்ததால் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்த வளாகத்தில் போராடிய ஆசிரியர்களின் 142 பேர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும், டி.பி.ஐ. வளாகம் அருகே அவசர உதவிக்கு அம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இப்படி விஷயம் விபரீதமாவதை தொடர்ந்து திமுக அரசு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறது.இந்த நிலையில் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் இந்த பேச்சுவார்த்தை நடத்தினால் தான் அடுத்த கட்டம் இந்த போராட்டம் தீவிரமடையாமல் இருக்கும் எனவும் தலைமைச் செயலகத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்
இதன் காரணமாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காக்ர்லா உஷா, நிதித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அவர் பேச்சு வார்த்தை நடத்தி தற்பொழுது இந்த போராட்டத்தை வாபஸ் வாங்க வைக்க வேண்டும் என்பதற்காக வருகிறார் எனவும் இந்த போராட்டம் மேலும் நடைபெற்றால் அடுத்தடுத்து திமுக அரசு பின்னடைவை சந்திக்கும் என்பதால் இந்த போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது ஆனால் ஆசிரியர்களும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர போவதில்லை என கூறி அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது