
சென்னை நகர வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பள்ளிக்கரணை பகுதி, தற்போது ஒரு பெரிய சுற்றுச்சூழல் விவகாரத்தின் மையமாக மாறியுள்ளது. இப்பகுதியில் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வரும் அடுக்குமாடி கட்டுமான திட்டம், சுற்றுச்சூழல் விதிகளை மீறி அனுமதி வழங்கியது பூதாகரமாக வெடித்துள்ளது இதற்கிடையில், நீர்வளத்துறை அளித்த தடையின்மை சான்றிதழ் (No Objection Certificate) பற்றிய விவரங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் காப்புக்காடாக உள்ளது. இதில், கட்டுமான திட்டங்கள் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்டபோது, அதற்கான வரைபடம் வெளியிடப்பட்டது. அதில், சதுப்பு நிலத்தில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவுக்குள் கட்டுமான பணிகள் தடை செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ராம்சார் தல வரைபடத்தில் வரும் குறிப்பிட்ட, 5 சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலத்தில், அடுக்குமாடி கட்ட சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது. இதில் புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அடுக்குமாடி திட்ட பணிகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வனத்துறை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சி.எம்.டி.ஏ., நீர்வளத்துறை ஆகியவை உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்துக்கு நீர்வளத்துறை அளித்த தடையின்மை சான்றிதழில் கூறப்பட்டுள்ளதாவது:
தனியார் நிறுவனம் அடுக்குமாடி திட்டத்துக்காக தேர்வு செய்துள்ள நிலத்தில், 2015, 2023 ஆண்டுகளில் பெய்த மழையின்போது, 6 அடி உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கியது ஆய்வில் தெரியவந்தது. ஒட்டியம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் இங்கு வந்து சேரும்.
எனவே, தரைமட்டத்தை மேடவாக்கம் - சோழில்கநல்லுார் சாலையின் தரைமட்டத்தில் இருந்து, 4 மீட்டர் அதாவது, 24 அடி உயரத்துக்கு நிலத்தை உயர்த்த வேண்டும். குறிப்பாக, இந்த நிலம், தரிசு என வருவாய் துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால், இந்நிலம் நீர் நிலையை ஆக்கிரமிக்கவில்லை என்பதற்கான வருவாய் துறையின் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி, கட்டுமான நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை.
இது தொடர்பான விண்ணப்பத்தை ஆய்வு செய்தபோது, இந்த நிலத்தை ஒட்டிய, 534 என்ற சர்வே எண்ணுக்கு உட்பட்ட பகுதி சதுப்பு நிலம் என்று உள்ளது. நீர்வளத்துறையின் பொறியாளர்கள் கள ஆய்வுக்கு சென்றபோதும், பக்கத்து சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் சதுப்பு நிலம் என்பது உறுதியானது.
மேலும், 534 என்ற சர்வே எண்ணுக்கு உரிய பழைய 'அ' பதிவேடு ஆவணத்தை தாக்கல் செய்ய கட்டுமான நிறுவனத்தை அறிவுறுத்தினோம். அந்நிறுவனம் ஆவணத்தை தாக்கல் செய்யவில்லை. எனவே, இது தொடர்பான ஆவணங்களை சரி பார்க்க வேண்டியது சி.எம்.டி.ஏ., வருவாய் துறை அதிகாரிகளின் பொறுப்பு. விண்ணப்பதாரரின் எல்லையை ஒட்டிய நிலம் சதுப்புநிலமா என்பதை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், இதில் கூடுதல் விபரங்கள், ஆவணங்களை சரி பார்க்காமல், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் எந்த அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் பல்வேறு அமைச்சர்களின் தலையீடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரிகேட் நிறுவனத்திற்கு 15 ஏக்கர் அளவில் 1,250 அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதியும், அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமம் கட்டுமான அனுமதியும் கொடுத்துள்ளது. மேலும் அப்போதைய அமைச்சர் பொன்முடி தலைமையிலான வனத்துறை, இந்த ராம்சார் தளத்தைப் பாதுகாக்காமல் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது.
