இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியாகும் லியோ விஜய் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது, குறிப்பாக இந்த ஆண்டு கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான விஜயின் 'வாரிசு' திரைப்படம் சரியாக போகாத காரணத்தினால் விஜய் ரசிகர்கள் லியோ திரைப்படத்தை மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த ஜவான் திரைப்படத்தின் வசூலை முறியடிக்க தென்னிந்திய சினிமா குறிப்பாக தமிழ் சினிமாவிலிருந்து வெளிவரும் இந்த 'லியோ'வால் மட்டுமே முடியும் என விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வரும் இந்த சூழலில் விஜயன் லியோ வெளியீட்டை சுத்தி சில அரசியல் நிகழ்வுகள் மற்றும் வெளியீட்டில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது விஜய் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த நிலையில் லியோவின் வருகை குறித்தும் லியோவை சுற்றி பின்னப்பட்டுள்ள அரசியல் குறித்து அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர். எங்கும் எதிலும் லியோ என்கின்ற நிலையில் அரசியல் பிரமுகர்கள் லியோ குறித்து தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் பிரபலமாக உலா வருகிறது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் லியோ திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் ஒருவர் 'லியோ திரைப்படத்தின் வெளியீடு அன்று முதல் காட்சிக்கு நீங்கள் போவீர்களா?' என கேள்வி எழுப்பும் பொழுது 'இத்தனை நாள் வரை நான் முதல் நாள் முதல் காட்சி எல்லாம் யார் படத்திற்கும் போய் பார்த்ததில்லை, அன்றைக்கு லியோ ட்ரெய்லர் பரபரப்பாக பேசப்பட்டது அதனால் பார்த்தேன்!' என கூறினார்.
இது மட்டுமல்லாமல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் லியோவை பற்றி கூறிய விபரம் தான் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறும் பொழுது 'லியோ திரைப்படம் ஆளும் கட்சியின் குறிப்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பது அனைவருக்கும் தெரிந்தது, அதிமுக ஆட்சியில் படங்கள் வெளியாவதில் சுதந்திரம் இருந்தது ஆனால் திமுக ஆட்சியில் அது போன்று நிலை இல்லை! ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தனது ஆதிக்கத்தை திரையுலகில் செலுத்த விரும்புகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 10 முதல் 20 படங்கள் எடுத்தவர்கள் தற்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் எடுக்கிறார்கள் என்றால் காரணம் ஆளுங்கட்சி என்கின்ற காரணத்தினால்தான்' என கூறினார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, ‘லியோ திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது! திரைப்படங்களுக்கு தமிழகத்தில் அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது இது மாறவேண்டும். தமிழகத்தில் சினிமாவை முழு உரிமையுடன் அனுமதிக்க வேண்டும் அரசியல் அழுத்தங்களை திரைப்படங்களுக்கு கொடுக்க கூடாது. 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் கூட இதுபோல்தான் எதிர்ப்பு கொடுக்கப்பட்டது பின்னர் பாஜக தலையீட்டின் காரணமாக படம் வெளிவந்தது' என கூறினார். கிட்டத்தட்ட அண்ணாமலை கூறியது லியோ படத்தை அரசியல் காரணங்களுக்காக தொந்தரவு செய்யக்கூடாது என்பது போன்ற கருத்துதான்.
இந்த நிலையில் அண்ணாமலை நேற்று மாலை கூறியதும் நேற்று நள்ளிரவு உதயநிதி ஸ்டாலின் லியோ திரைப்படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு 2:30 மணியளவில் படத்தை பார்த்துவிட்டு 'வாழ்த்துக்கள் விஜய் அண்ணா' எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியை விசாரிக்கும்போது லியோ திரைப்படத்தை அரசியல் ரீதியாக எதிர்ப்பது இனி சரிப்படாது அதுமட்டுமில்லாமல் பாஜக வேறு லியோ திரைப்படத்திற்கு ஆதரவாக வரும் என்ற நிலையில் உதயநிதி பாராட்டியுள்ளார் எனவும் கூறுகின்றனர்.மாலை அண்ணாமலை லியோ திரைப்படத்திக்குள் அரசியல் புகுத்தக்கூடாது என கூறிய நிலையில் அன்று இரவே உதயநிதி லியோ திரைப்படத்தை பாராட்டி பதிவிட்டது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.