
உலக அரசியல் மேடையில் இன்று இந்தியா என்பது வெறும் ஒரு நாடு அல்ல; அது ஒரு தவிர்க்க முடியாத சக்தி. அமெரிக்க அதிபர் டிரம்ப்பே நேரடியாக இறங்கி வந்து இறக்குமதி வரிகளைக் குறைக்க முன்வருகிறார் என்றால், அதற்குப் பின்னால் இருப்பது பிரதமர் மோடியின் அசைக்க முடியாத ஆளுமை மற்றும் இந்தியாவின் அசுர வளர்ச்சி. முன்பு இந்தியா ஒரு சந்தையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் இன்று, இந்தியா ஒரு 'Global Decision Maker'. இந்தியாவின் நுகர்வோர் சக்தி (Market Size) உலகிலேயே மிகப்பெரியது. இந்தியாவை பகைத்துக்கொண்டால் அமெரிக்க நிறுவனங்களுக்குத்தான் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்படும் என்பதை டிரம்ப் உணர்ந்துள்ளார்.பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது என்ற துணிச்சலான வெளியுறவுக் கொள்கையே டிரம்ப்பை இறங்கி வரச் செய்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தில், இந்திய விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மிகவும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடும் அழுத்தங்களுக்கு இடையிலும், இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளையும், பால் பண்ணையாளர்களையும் பாதிக்கும் எந்தவொரு நிபந்தனைக்கும் இந்தியா அடிபணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான வெற்றியாகக் கருதப்படுவது, அமெரிக்காவின் நீண்டகால கோரிக்கையான பால் பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி இறக்குமதிக்கான தடையை இந்தியா தளர்த்தாமல் பாதுகாத்ததாகும். அமெரிக்காவில் கால்நடைகளுக்கு விலங்கு உபபொருட்களை உணவாக அளிக்கும் நடைமுறை உள்ளதால், அந்தப் பால் பொருட்கள் இந்திய மக்களின் கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகளுக்கு எதிராக அமையும் என்று கூறி இந்தியா தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் அந்த "சிவப்பு கோடு" தாண்டப்படவில்லை. இதன் மூலம் இந்தியாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பால் உற்பத்தித் துறையை நம்பி இருக்கும் சுமார் 8 கோடி மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், மரபணு மாற்றப்பட்ட (GM Foods) பயிர்கள் மற்றும் உணவுகளை இந்தியச் சந்தையில் அனுமதிப்பதிலும் மத்திய அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளவில்லை. அமெரிக்கா தனது சோயாபீன்ஸ் மற்றும் மக்காச்சோளத்தை அதிகளவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பிய போதிலும், இந்திய விவசாயிகளின் சந்தை வாய்ப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார். மாறாக, இந்தியாவிற்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத பாதாம், பிஸ்தா போன்ற உயர் ரக பருப்பு வகைகளின் இறக்குமதியில் மட்டுமே சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது இந்திய நுகர்வோருக்குப் பலன் அளிக்கும் அதே வேளையில், உள்ளூர் விவசாயிகளைப் பாதிக்காது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இது குறித்து விளக்கம் அளிக்கையில், இந்த ஒப்பந்தம் விவசாயம் மற்றும் பால் துறையை முழுமையாகப் பாதுகாப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தியப் பொருட்கள் மீதான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளதால், இந்தியாவிலிருந்து ஜவுளி மற்றும் பிற தொழிலாளர் சார்ந்த பொருட்கள் மட்டுமல்லாமல், பதப்படுத்தப்பட்ட சில விவசாயப் பொருட்களும் அமெரிக்கச் சந்தையில் அதிக லாபத்துடன் விற்பனையாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அதே வேளையில், தனது நாட்டின் "அன்னதாதா"க்களான விவசாயிகளின் உரிமையையும் சுயசார்பையும் மோடி அரசு சமரசமின்றி நிலைநாட்டியுள்ளது.
