24 special

தீவிரவாதியை புகழ்ந்த பிரதமர்..! பதிலடி கொடுத்த இந்தியா..!


இந்தியா : கடந்த 2016 ஜூலை மாதம் பயங்கரவாதியான புர்ஹான் வானியை இந்திய பாதுகாப்புப்படைகள் பத்திரமாக சொர்க்கத்திற்கு வழியனுப்பிவைத்தன. அவனால் மூளைச்சலவை செய்யப்பட்டு பல அப்பாவி இளைஞர்கள் பயங்கரவாதக்குழுக்களில் இணைந்ததோடு பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவனை தியாகி என்ற அளவில் பாகிஸ்தான் புகழ்ந்து தள்ளி வருகிறது.


பயங்கரவாதி புர்ஹான் வானியின் மறைவுதினத்தையொட்டி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அவனை புகழ்ந்து தள்ளியதோடு ஜம்முகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அவர் தனது ட்விட்டரில் " இந்திய ஆக்கிரமிப்பு படைகள் 2016ஆம் ஆண்டு இதேநாளில் கொலைசெய்தன.

ஆனால் புர்ஹான் வானி இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் மனதில் பற்றவைத்த சுதந்திர சுடரை யாராலும் அணைக்கமுடியவில்லை. இரக்கமற்ற அதேநேரத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக அவரது வீரம் சொறிந்த போராட்டம் காஷ்மீர் இளைஞர்களுக்கு எப்போதும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. அவர்களின் பாதையில் அவரது ஆன்மா சுடர்விடும்" என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் "புர்ஹான் வானியின் தன்னலமற்ற பங்களிப்புக்காக பாகிஸ்தான் அரசும் பாகிஸ்தான் மக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். காஸ்மீர் இளைஞர்களின் நினைவுச்சின்னமான புர்ஹான் வானியின் ஆறாவது ஆண்டு நினைவுதினம் தியானத்தின் நாளை குறிக்கிறது" என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய தரப்பில் " காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். பாகிஸ்தான் இதில் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு பினாமி போரை நடத்திவருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவாக செயல்பட்டுவருகிறது" என கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.